Welcome to SWAYAMVARALAYA. FREE...FREE...FREE ASTROLOGICAL PREDICTION.. FEEL FREE TO ASK ANY QUESTION

அருள்மிகு சட்டைநாதர் திருக்கோவில்,சீர்காழி

சுவாமி : சட்டைநாதர்.

புராண பெயர்:  பிரம்மபுரம்,

அம்பாள் : பெரியநாயகி, திருநிலைநாயகி.

மூர்த்தி : சோமாஸ்கந்தர், தோணியப்பர்.

தீர்த்தம் : இத்தலத்தில் 22 தீர்த்தங்கள் உள்ளன. அதில் பிரம்மதீர்த்தம், காளி, பராசர, புறவநதி, கழுமலநதி, விநாயகநதி ஆகியவை முக்கிய தீர்த்தங்கள் ஆகும்.

தலவிருட்சம் : பாரிஜாதம், பவளமல்லி.

sattanada-5தலச்சிறப்பு : இத்திருத்தலம் தேவாரப்பாடல் பெற்ற 274 தலங்களில் 14வது தேவாரத்தலம் ஆகும். சட்டைநாதர் சுவாமி திருத்தலம்  நகர் நடுவில் நாற்புறமும் கோபுரங்களுடனே உயர்ந்த திருச்சுற்று மதில்களோடு விளங்குகின்றது.  அதனுள்  பிரம்மபுரீசுவரருக்கும், திருநிலை நாயகிக்கும், திருஞானசம்பந்தருக்கும் தனித்தனியே ஆலயங்கள் உள்ளன.  இவை  கிழக்குப்பார்த்த சன்னதிகளே, சுவாமிகோவில் மகா மண்டபத்தில் திருஞானசம்பந்தர் உற்சவமூர்த்தியாக எழுந்தருளி இருக்கிறார்.  வடக்கு உட்பிரகாரத்தில் ஸ்ரீ முத்துசட்டைநாதரும், தெற்கு உட்பிரகாரத்தில் திருமாளிகைப்பத்தியில் அறுபத்து மூவர்களும்  உள்ளனர். அங்கேயே சட்டைநாதர் பலிபீடமும் இருக்கின்றது.

மேலைப் பிரகாரத்திலும்  வடக்குப் பிரகாரத்தில் மேலே மலைக்குப் போகப் படிக்கட்டுகள் அமைந்திருக்கின்றன.

சுவாமி கோவிலை ஒட்டிக்  கட்டுமலையில் ஸ்ரீ உமாமகேசுவரார் பெரிய உருவத்துடன் எழுந்தருளி இருக்கின்றார்.   இவ்விரு முர்த்தங்களும் சுதையாலானவை.

ஸ்ரீ சட்டைநாதர் சுவாமி மிகவும் மூர்த்திகரம் மிக்கவர்.  இவர் திருநாமங்கொண்டே இத்தேவஸ்தானம் விளங்குகிறது.  இம்மலை  திருத்தோணிமலை எனப் பெயர்பெறும்.  சுவாமி கோவில் வெளிப்பிராகாரம் வடமேற்கு மூலையில் திரு ஞானசம்பந்தர்  திருக்கோவில் விளங்குகிறது.  அதற்கு ஈசானத்தில் அம்மையின் ஆலயம் உள்ளது.  அம்மை சன்னதியில் பிரம்ம  தீர்த்தம் நாற்புரமும் கருங்கற் படிகட்டுகளுடன் விளங்குகிறது.  சுவாமி சன்னதியில் மடைப்பள்ளியும் தேவஸ்தான  அலுவலகமும் தனித்தனியே அமைந்திருக்கின்றன.  இத்தலத்தில் 47 கல்வெட்டுகள் உள்ளன.  கல்வெட்டில் இத்தலம் இராஜராஜவன்  நாட்டுத் திருக்கழுமல நாட்டுப் பிரமதேயம் திருக்கழுமலம் என்று குறிக்கப் பெற்றுள்ளது. பிரம்மபுரீசுவரர்  திருக்கழுமலமுடையார் என்றும், தோணியப்பர் திருத்தோணிபுரம் உடையார் என்றும், தோணியப்பர் பக்கத்திலுள்ள அம்மை  பெரியநாச்சியார் என்றும், திருஞானசம்பந்த பெருமான் ஆளுடைய பிள்ளையார் என்றும் குறிக்கப் பெறுகின்றார்கள்

தல வரலாறு : இத்திருத்தலம் 1000 ஆண்டுகளுக்கு முன் பழமையானது.  மகாவிஷ்ணு மாவலிபால் குறள் வடிவாகச் சென்று  மூன்றடி மண் யாசித்து விண்ணையும் மண்ணையும் ஈரடியால் அளந்து மூன்றாவது அடியை அவன் தலை மேல் வைத்துப் பாதாள  உலகிற்குச் செலுத்தினார்.  அதனால் அவர் அகங்காரங் கொண்டு உலகு நடுங்கத் திரிவாராயினார்.   இஃதறிந்த வடுகநாதர் தமது  திருக்கரத்தால் விஷ்ணுவை மார்பில் அடித்துப் பூமியில் விழ்த்தினார்.  இலக்குமி மாங்கலியப் பிச்சை வேண்டியவாறே  இறைவனருள் செய்ய, விஷ்ணு உயிர் பெற்று எழுந்து வணங்கினார்.  அவர்தம் தோலையும், எலும்பையும் அணிந்து கொள்ள  வேண்டுமென்று விண்ணப்பிக்க இறைவனும் எலும்பைக் கதையாகக் கொண்டு, தோலைச் சட்டையாகப் போர்த்தி அருள்செய்தார்.   அதுமுதல் பெருமான் தண்டபாணி, சட்டை நாதர், வடுக நாதர், ஆபதுத்தாரணர் எனப் பல திருநாமங்களோடு விளங்கி வருகிறார்.

ஆரியவர்த்தத்தை ஆண்டு வந்த காலவித்து என்னும் வேந்தன் புத்திரப் பேறின்மையினால் வருந்தி உரோமச முனிவரைக் கண்டு  தன் கவலையைத் தெரிவித்தான்.  முனிவரும் கயிலையின் சிகரத்தை தரிசித்தால் கவலை நீங்கும் என்று கூறினார்.  எவ்வாறு  தரிசிக்க முடியும் என்று கவலையுற்ற வேந்தனை நாட்டுக்கு அனுப்பிவிட்டுக் கயிலாயம் சென்ற முனிவர் தவஞ்செய்தார்.   இறைவன் முனிவர் முன்தோன்றி வேண்டுவது யாதென, முனிவரும் தென்னாட்டு மக்கள் தரிசிக்க வேண்டி இம்மலைச்சிகரம்  ஒன்றைத் தென்திசையில் தோற்றுவித்து அதில் உமாதேவியுடன் வீற்றிருந்தருள வேண்டும் என்று பிரார்த்தித்தார். அதற்குக்  கயிலாயபதி ஆதிசேடனுக்கும் வாயுவுக்கும் போர் நடக்கும் பொழுது இது நிறைவேறும் என்று அருள்புரிந்தார்.  பின்னொருநாள்  ஆதிசேடனுக்கும், வாயுவுக்கும் தம்முள் யார் வலியர் என்பது பற்றிப் போர் நிகழ்ந்தது.  ஆதிசேடன் தனது ஒரு தலையை  மெதுவாகத் தூக்கினான்.  உடனே மலைச்சிகரம் பெயர்ந்து ஒரு பெருங்கிளையும் பல சிருகிளைகளுமாக 11 கிளைகள் விழுந்தன.   பெருங்கிளையான சிகரம் இறைவன் அருளால் 20 பறைவகளால் இங்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டது.  காலவித்து என்னும் அரசனும் தரிசித்தான்.  பின்னர் அம்மலை மறைந்து நிற்க, மலைவந்து தங்கிய இடத்தில் சுதையால் 20 பறைவகள் தாங்கியது  போலவே கட்டுமலை ஒன்றைக்கட்டுவித்து அரசனும் தன் நகர் சேர்ந்தான்.

சமயக்குரவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர், சீர்காழியில் வசித்த சிவபாத இருதயர்- பகவதி அம்மையார் தம்பதியரின் மகனாகப் பிறந்தார். இவரை முருகனின் அம்சம் என்றும், இளைய பிள்ளையார் என்றும் வழங்குவர்.
இவர் சற்புத்திர மார்க்கத்தை  விளக்கவும் சைவசமயம் யாங்கணும் பரவவும் அவதரித்தார்.  மூன்றாண்டு நிறம்பாத பிள்ளையாரைக் கரையில் இருக்கச் செய்து  நீராடிக் கொண்டிருந்தார்.

தான் மட்டும் நீராடச் சென்றார். அப்போது சம்பந்தருக்கு பசி ஏற்பட,  “அம்மா! அப்பா!’ என அழுதார். இவரதுஅழுகுரல்கேட்ட சிவன் – பார்வதியை நோக்கி குழந்தையின்பசிக்கு பால் கொடுக்குமாறு கூறினார். அதன்படி சிவனுடன் சம்பந்தருக்கு தரிசனம் தந்து மெய்ஞானம் கலந்த பாலை புகட்டினாள் அம்பிகை. பசி தீர்ந்த சம்பந்தர் வாயில் பால் வழிய அமர்ந்து விட்டார். குளித்து விட்டு வந்த தந்தை, “”பால் கொடுத்தது யார்? யாராவது ஏதாவது கொடுத்தால் வாங்கிச் சாப்பிடக்கூடாது  என்பது உனக்குத் தெரியாதா? அபச்சாரம் செய்து விட்டாயே,” எனச்சொல்லி குச்சியால் சம்பந்தரை அடிக்க கையை ஓங்கினார். அப்போது சம்பந்தர், சிவனும் பார்வதியும் தரிசனம் தந்த திசையை காட்டி,  

“தோடுடைய செவியன்” என்னும் திருப்பதிகம் பாடியருளினார். தன் குழந்தைக்கு இறைவனே காட்சி தந்து பாலூட்டியது அறிந்து பரவசப்பட்டார்.  பின்னர் பிள்ளையார் சிவ சமயம் எங்கும் நிலை  பெறுமாறு பற்பல செயற்கருஞ் செயல்களைச் செய்து தலங்கள் தோறும் சென்று அரிய தேவாரப்பதிகங்களை அருளி இப்பதிக்கு  அருகிலுள்ள திருநல்லூர் பெருமண (ஆச்சாள்புர) த்தில் தமது பதினாறாவது வயதில் வைகாசி மூலத்தில் தமக்கு நிகழ்ந்த  திருமணத்தின் பொருட்டு வந்த அன்பர் கூட்டத்துடன் இறைவன் அருட்சோதியிற் கலந்தருளினார்.

வழிபட்டோர் : குமரவேள், ஸ்ரீகாளி, பிரம்மன், விஷ்ணு, குரு, இந்திரன், சூரியன், சந்திரன், அக்னி, சேடன், ராகு, கேது,  வேதவியாசர்.

பாடியோர் : திருஞானசம்பந்தர் 67 பதிகங்களும், திருநாவுக்கரசர்

3 பதிகங்களும், சுந்தரர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர்.

நடைதிறப்பு : காலை 6.00 மணிமுதல் மதியம் 1.00 மணிவரை, மாலை 4.00 மணிமுதல் இரவு 9.00 மணிவரை.

பூஜை விவரம் : 6 கால பூஜைகள்.

திருவிழாக்கள் : சித்திரை திருவாதிரையில் பிரம்மோற்ஸவம் நடைபெறும். இதில் 2ம் நாள் சம்பந்தருக்கு அம்பாள் பால் தந்த உற்சவம் பிரம்ம தீர்த்தத்தின் கரையில் நடக்கிறது. அன்றைய தினம் ஞானசம்பந்தருக்கு நைவேத்யம் செய்த பாலை பிரசாதமாக சாப்பிட்டால் மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம். மலைக் கோயிலில் அருள்பாலிக்கும் உமா-மகேஸ்வரருக்கு சித்திரை, ஆடி, ஐப்பசி, தை மாதப்பிறப்புகளிலும், திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரை மற்றும் சிவராத்திரி நாட்களிலும் தைலாபிஷேகம் நடைபெறும். ஆடிப்பூரம், நவராத்திரி. தை அமாவாசை, வைகாசி மூலம், ஆனி ரோகிணி, ஐப்பசி சதயம் ஆகிய நாட்களிலும் சிறப்பு பூஜை உண்டு.

பிரார்த்தனை: வழக்குகளில் பிரச்னை உள்ளவர்கள் இவரை வழிபடுவது சிறப்பு. குழந்தை இல்லாதவர்கள் இத்தலத்துக்கு வந்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.

நேர்த்திக்கடன்: சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

18 சித்தர்களில் ஒருவரான சட்டை முனி சித்தர் இங்கு ஜீவ சமாதி ஆகி உள்ளார். சிவன் கோயில் பிரகாரத்தில் இவரது ஜீவ சமாதிக்கு மேல் ஒரு பீடம் உள்ளது. இங்கிருந்தபடியே உச்சியிலிருக்கும் சட்டைநாதரை தரிசிக்க முடியும். வெள்ளிக்கிழமைகளில் இரவு 10 மணிக்கு இந்த பீடத்திற்கு அபிஷேகம் நடக்கும். இரவு 12 மணிக்கு இதற்கு புனுகு சட்டம் சாத்தி, வடை மாலை அணிவித்து, பாசி பருப்பு பாயசம் நைவேத்யம் செய்யப்படுகிறது. அஷ்டமி திதிகளில் சிறப்பு பூஜை உண்டு.

ருகிலுள்ள நகரம் : சீர்காழி.

கோவில் முகவரி : அருள்மிகு சட்டைநாதர் திருக்கோவில்,

சீர்காழி – 609 110, நாகப்பட்டினம் மாவட்டம்.

போன்: +91- 4364-270 235, +91- 94430 53195

அன்பர்கள் இவ்வாலயத்திற்கு ஒருமுறை சென்று சிவனருள் பெற்று சிறப்பாக வாழப் பிரார்த்தித்து நிறைவு செய்கின்றேன்.

astrologer_thetiyur_mahadevDivine Astrologer
தேதியூர் V.மஹாதேவன்
Swayamvaralaya,
vedicpoojahomam.com
98417 89483, 8825609304