Welcome to SWAYAMVARALAYA. FREE...FREE...FREE ASTROLOGICAL PREDICTION.. FEEL FREE TO ASK ANY QUESTION

திருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரர்

thiruparaithurai1 சிறப்பு: தோல் நோய் நீக்கம், அபிசார, அபஸ்மாரம் நீங்க, புத்திரபாக்கியம், தாரித்திரிய நீக்கம், கன்னிப் பெண்டிர்க்கு விவாஹம் முதலியன அருள்பாலிக்கும் தலங்களுள் இது மிகவும் சிறப்பானது.

 இருப்பிடம் : திருச்சி – கரூர்  தேசிய நெடுஞ் சாலை மார்க்கத்தில் திருச்சியிலிருந்து 16 கி.மீ. தூரத்திலும் கரூரில் இருந்து 60 கி.மீ. தூரத்தில் நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள  ஊர் “திருப்பராய்த்துறை”.

 இறைவன்: ஸ்ரீதாருகாவனேசுவரர்,பராய்த்துறை நாதர்.

இறைவி: அருள்மிகு பசும் பொன் மயிலாம்பிகை, ஹேமவர்ணாம்பிகை

காவிரியின் தென்கரையில் உள்ள திருத் தலங்களுள் சிறந்து  விளங்கும் புண்ணிய சேஷத்ரம். பராய்மரங்கள் நிறைந்து விளங்கும் தலம் ஆனதால் “திருப்பராய்த்துறை” என அழைக்கப்படுகிறது. வடமொழியில் “தாருகா வனம்” எனப் பெயர் பெறும்.  கோவிலின் கிழக்கில் சுவாமி சித்பவானந்தரின் இராமகிருஷ்ண தபோவனம் உள்ளது. மேற்கில் இராமகிருஷ்ண குடில் உள்ளது.

thiruparaithurai2வேத நெறி தழைத்தோங்க, திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், மணிவாசகர், அருணகிரியும், பட்டினத்தாரும் பரமனின் பெருமையினைப் பாடிச் சிறப்பித்துள்ள திருத்தலம் திருப்பராய்த்துறை என்னும் திவ்ய ஸ்தலம் ஆகும்.

தோல் நோய் உடையவர்கள் பராய் மரத்தின் பட்டையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்துப் பூசினால் நோய் நீக்கம் பெறும்.  துறை என்னும் பெயரில் அமைந்துள்ள பதின் மூன்று தலங்களுள் இது மிகவும் சிறப்பான தாகக் கூறப்படுகிறது.

 புராண வரலாறு:

சிவபெருமான் பிட்சாடனராகச் சென்று தாருகாவனத்து முனிவரின் செருக்கை அடக்கி, அருள்புரிந்த தலம் தாருகாவனம் என்னும் திருப்பராய்த்துறையாகும்.

thiruparaithurai3முன்னொரு காலத்தில் தாருக முனிவர்கள் சிவபெருமானை மதியாது வேள்விகள் இயற்றி வந்தனர்.  தாருக முனிவர்களின் ஆணவத்தை அடக்கவும், முனிபத்தினிகளின் பக்தியை தகர்க்கவும் சிவபெருமான் பிச்சாடனராகவும், திருமால் மோகினியாகவும் திருஅவதாரம் செய்தனர்.

மோகினியின் அழகில் மயங்கிய முனிவர்கள் அனைவரும் காமவேட்கை கொண்டு விரத நோன்பை கைவிட்ட னர்.  மோகினியின் பின்னே ஊன் உறக்கமின்றி அலைந்தனர்.பரமனின் பிச்சாடணர் வடிவம் கண்ட ரிஷி பத்தினிகள் காம வலையில் சிக்கி நிலை இழந்தனர்.  ஆடையும், வளையலும் நழுவின.  நாணமும், கற்பும் சிதைந்தன. மயக்கம் கொண்டு பிட்சாடனரைத் தொடர்ந்து சென்றனர்.

மோகினியின் வடிவழகும், பிட்சாடனரின் உருவழகும், தம்மையும், தம் பத்தினிமார் களின் பெருமையையும் பீடழிக்கச் செய்தது கண்டமுனிவர்கள் சினம் கொண்டனர்.  “அபிசார ஹோமம்” செய்து புலியை சிவபெருமான்மீது ஏவினர்.  புலியைப் பிடித்து தோலை உரித்து ஆடையாக அணிந்தார்.  பின்னர் ஏவிய முத்தலைச் சூலத்தைப் படையாக ஏந்தினார். மான்கன்றை இடக்கரத்தில் தாங்கினார். பாம்புகளை அணிகலனாக அணிந்து கொண்டார்.  பூத கணங்களைச் சேனையாக ஆக்கிக் கொண்டார்.  உடுக்கையை கரத்தில் தாங்கி முயலகன் என்னும் “அபஸ்மாரத்தை” தம் திருவடிக்கீழ் அமுக்கி அதன் முதுகின் மேல் ஏறிக் கால் ஊன்றி நின்றார்.

பரமனின் சக்தியை அறிந்து கொண்ட முனிவர்கள் ஆணவம் நீங்கப் பெற்றனர்.  சிவனாரைப் பணிந்தனர்.  எம் பெரும் பிழைகளை நாதா! நீ பொறுத்தி! என்று திருவடிகளில் வீழ்ந்து வணங்கினர்.

தன்னை அடைந்தோர்க்கும், அடையா தோர்க்கும் அருள்பாலிக்கும் அண்ணல் “செந்நெறி ஒழுகித் தீய மறத்தினை அகற்றி மாதவம் புரிவீர்”! என்று கூறி அருள்புரிந்தார். அம்முனிவர்கள் தவங்கிடந்து வழிபட்ட தலமே ‘தாருகா வனம்” எனும் திருப்பராய்த்துறையாகும்.

 கோவில் அமைப்பு :

கோயிலின் உள்கோபுரம் ஏழுநிலைகளைக் கொண்டுள்ளது.  வலப்புறம் தீர்த்தக்குளம் உள்ளது. இடப்புறம் உள்ள மண்டபத்தில் விவேகானந்தர் தொடக்கப்பள்ளி உள்ளது.  செப்புக்கவசமிட்ட கொடிமரம், பலிபீடம், நந்தியும் ஒரே மண்டபத்தில் உள்ளது.  மூலவர் சந்நிதி கிழக்கு நோக்கியும், அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியும் உள்ளது. உள்பிரகாரத்தில் வலம்புரி விநாயகர் ஸப்த கன்னியர் அறுபத்துமூவர், சோமாஸ்கந்தர், பஞ்சபூத லிங்கங்கள், பிட்சாடனர், பிரம்மா, துர்க்கை, பன்னிரு கரங்களுடன் ஷண்முகர் ஆகியோர் உள்ளனர். நவக்கிரஹங்களுள் சனீஸ்வரர்க்கு மட்டும் வாகனமாகக் காகம் உள்ளது.  தட்சிணாமூர்த்தி சந்நிதி தனி விமானத்துடன் சிங்கங்கள் தாங்கி நிற்க சிறந்தவேலைப்பாடுகளுடன் அழகிய தூண்கள் தாங்கி நிற்க அமைந்துள்ளது.

பிரம்மாண்டமான கல்ஹார வேலைப் பாடுகள் சிற்பங்கள் நிறைந்த சுற்றுப் பிரகார மண்டபங்கள் ஓங்கி உயர்ந்த நெடிய மதிற்சுவர்கள் தூரத்தே தெரியும் கோபுரத்தை வணங்கியவாறே சென்று, திருவருள் பிரகாசிக்கும் திருத்தலத்தை வணங்குவோர்க்கு மீண்டும் பிறவாப் பேறு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

 விழாக்கள் :

கங்கையிற் புனிதமாய காவிரியில் துலாஸ்நானம் மிக உயர்ந்தது. புத்திரபாக்கியம், தாரித்திரிய நீக்கம், கன்னிப் பெண்டிர்க்கு விவாஹம் முதலியன தருவது துலாக் காவேரி ஸ்நானம் ஆகும். துலாஸ்நானம் முடிந்து வஸ்த்தரம், பொன், தானியம், பழங்கள் முதலியன தானம் செய்வோர்க்கு இந்திரபோகம் இனிதே கிடைக்கும்.

காவேரி துலாஸ்நானம் என்றதும் நம் நினைவுக்கு வருவது இரண்டு ஊர்களே யாகும்.  ஐப்பசி முதல் நாள் திருப்பராய்த்துறையிலும், ஐப்பசிக் கடைசி நாள் மயிலாடு துறையிலும் காவிரியில் ஸ்நானம் செய்து இறைவனை வழிபடுவது தொன்று தொட்டு வரும் மரபாகும்.

astrologer_thetiyur_mahadevஇத்தகைய சிறப்பு வாய்ந்த திருக்கோயில் இந்து சமய ஆட்சித்துறையின் கீழ் சிறப்பாக இயங்கி வருகிறது சிவாச்சாரியப் பெருமக்கள் மிகவும் ஆச்சாரத்துடனும் பக்தியுடனும் பூஜை செய்து திருவருட்பிரசாதம்  கொடுக்கின்றனர்.

 நடைதிறந்திருக்கும் நேரம்:

காலை 6 முதல் 12 மணி வரை, மாலை 5 முதல் 8 மணி வரை.

ஐப்பசி துலா ஸ்நானச் சிறப்பும் கார்த்திகை முடவன் முழுக்கு சிறப்பு நீராடலும் பெற்ற காவிரி அன்னையின் அருளுடன் திருப்பராய்த் துறை தாருகாவனேசுவரர் ஆலயத்தை வணங்கும்பேறு எனக்கும் என் துணைவியார்க்கும் கிடைத்தது.   அன்பர்கள் இவ்வாலயத்திற்கு ஒருமுறை சென்று சிவனருள் பெற்று சிறப்பாக வாழப் பிரார்த்தித்து நிறைவு செய்கின்றேன்.

Divine Astrologer
தேதியூர்
V.மஹாதேவன்
Swayamvaralaya,
vedicpoojahomam.com
98417 89483,7299 424347