Welcome to SWAYAMVARALAYA. FREE...FREE...FREE ASTROLOGICAL PREDICTION.. FEEL FREE TO ASK ANY QUESTION

பிராணநாதேஸ்வரர்கோவில், பஞ்ச மங்கள ஷேத்திரம் – திருமங்கலக்குடி

tmk3பிராணநாதேஸ்வரர்கோவில், பஞ்ச மங்கள ஷேத்திரம் – திருமங்கலக்குடி

பூர்வஜன்மதோஷம், பித்ருக்கள்சாபம் நிவர்த்தியாகும் திருக்கோவில்

இறைவன்பெயர் பிராணநாதேஸ்வரர்

இறைவிபெயர் மங்களநாயகி, மங்களாம்பிகை

பதிகம் திருநாவுக்கரசர் – 1 திருஞானசம்பந்தர் – 1

தல விருட்சம்: கோங்கு, இலவு(வெள்ளெருக்கு)

தீர்த்தம்: மங்களதீர்த்தம் (காவிரி)

பழமை: 1000-2000 வருடங்களுக்கு முன்

tmk2எப்படிப்போவது: கும்பகோணம் – மயிலாடுதுறைசாலைவழியிலுள்ள ஆடுதுறை அடைந்து அங்கிருந்து திருப்பனந்தாள் செல்லும்சாலையில் சுமார் 2 கி.மி. தொலைவில் திருமங்கலக்குடி சிவஸ்தலம் இருக்கிறது.

ஆலயமுகவரி: அருள்மிகுபிராணவரதேஸ்வரர் திருக்கோவில்,திருமங்கலக்குடி, திருமங்கலக்குடிஅஞ்சல், திருவிடைமருதூர்வட்டம், தஞ்சாவூர்மாவட்டம் – PIN – 612102

நடை திறக்கும் நேரம்: இவ்வாலயம்காலை 6-30 மணிமுதல் 12-30 மணிவரையும், மாலை 4 மணிமுதல்இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

போன்: +91-435 – 247 0480.

பஞ்ச மங்கள ஷேத்திரம்: 1. இந்த ஊரின் பெயர் மங்கலக்குடி, 2. அம்பாள் பெயர் மங்களாம்பிகை, 3. இக்கோயில் விமானம் மங்கள விமானம் 4. இத்தலத்தின் தீர்த்தத்தின் பெயர் மங்கள தீர்த்தம், 5. இத்தலத்து விநாயகர் பெயர் மங்கள விநாயகர் என்பதால் இத்தலம் மங்களமே உருவாக இருப்பதால் பஞ்ச மங்கள ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

tmk1கிழக்குதிசைநோக்கியுள்ள ஐந்துநிலைகளுடன் கூடிய ராஜகோபுரத்துடனும், இரண்டு பிரகாரங்களுடனும் இவ்வாலயம் அமைந்துள்ளது. முன் மண்டபத்தில் அம்பாள் மங்களநாயகியின் சந்நிதி தெற்குநோக்கி அமைந்துள்ளது. கருவறையில் கோவில்கொண்டிருக்கும் சிவபெருமான் நீண்டுயர்ந்த பாணவடிவில் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். சந்திரசேகரர், மயில்வாகனர், நால்வர், பிரதோஷநாயகர் உற்சவமூர்த்திகள் உள்ளனர். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, ரிஷபாரூடர், பிரம்மா, துர்க்கைக்கு சந்நிதிகள் உள்ளன. உள்சுற்றில் விநாயகர், ஆறுமுகர், கஜலட்சுமி, பைரவர் சந்நிதிகளும், நடராஜசபையும் உள்ளன. இரண்டுநடராஜ உற்சவமூர்த்தங்கள் இங்குகாணப்படுவது சிறப்பு. ஒருவர் ஆனித்திருமஞ்சனநாளிலும் மற்றொருவர் ஆருத்ராதரிசனநாளிலும் திருவீதி உலாவருகின்றனர்.

இத்தலத்து இறைவியை வழிபட, திருமணத்தடைநீங்கும்; மாங்கல்யபலம் நீடிக்கும், ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் கிட்டும் என்பது பக்தர்களின் அனுபவம். கார்த்திகைமாத முதல் ஞாயிறு தொடங்கி, தொடர்ந்து 12 ஞாயிற்றுக்கிழமைகள் – தயிர்சாதத்தை வெள்ளெருக்கு இலையில் வைத்து சுவாமிக்கு நிவேதனம் செய்து அதை உண்ண, நோய் குணமடைவதாக கூறப்படுகிறது. இவ்வாறு செய்து பிணிகள் விலகியோர் பலருண்டு. இத்தலத்தில் ஞாயிறு மதியம் உச்சிகால பூஜையில் தயிர்சாதம் பிரசாதமாக வெள்ளெருக்கு இலையில் தரப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் தயிர்சாதம் அன்னதானம் செய்வதால் அஷடமச்சனி, 7 1/2 ஆண்டுச்சனி, தசாபுக்திதோஷம் ஆகியவை நிவர்த்தியாகும்.

மங்களநாயகியின் திருக்கரத்தில் இருக்கும் மாங்கல்யசரடு பெண்களுக்கு பிரசாதமாக தரப்படுகிறது. மங்காளம்பிகைக்கு 5 வெள்ளிக்கிழமைகள் அர்ச்சனை செய்து வழிபட்டால் மாங்கல்ய தோஷம், களத்திர தோஷம் ஆகியவை நீங்கப்பெற்று தீரக்கசுமங்கலி பிராப்தமும், விரைவில் விவாக பிராப்தமும் கிடைக்க அம்பாள் அருள்புரிவாள்.

மேலும் இத்திருக்கோவிலுள்ள அகத்தீஸ்வரர் லிங்கத்திற்கு அமாவாசை தினத்தில் அபிஷேகம் செய்வதால் பூர்வஜன்ம தோஷம், பித்ருக்கள்சாபம் நிவர்த்தியாகும்.

சூரியன், திருமால், காளி, பிரம்மன், அகத்தியர் முதலானோர் இத்தலத்துக்கு வந்து இறைவனை வழிபட்டுப் பேறுபெற்றதாக தலபுராணம் கூறுகிறது.

தலவரலாறு: பதினோராம் நூற்றாண்டை சேர்ந்த முதலாம் குலோத்துங்கசோழன் காலத்தில், அலைவாணர் என்பவர் அமைச்சராக இருந்தார். அவர் அரசனின் அனுமதி பெறாமல் வரிப்பணத்தை தான் வசிக்கும் திருமங்கலக்குடியில் சிவபெருமானுக்கு ஆலயம் எழுப்பச் செலவிட்டார். இதை யறிந்த மன்னன் அவரை அழைக்க, அமைச்சரோ மன்னனைக்காண அஞ்சி உயிர்நீத்தார். இறக்கும் போது அவர் தனது மனைவியிடம் “நான் இறந்தவுடன் என்உடலை திருமங்கலக்குடிக்கு எடுத்துச்சென்று அங்கேயே அடக்கமும் செய்யவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். அவ்வாறு அவரது இறந்தஉடலை எடுத்துச்செல்லும் போது, அமைச்சரின் மனைவி இறைவி மங்களாம்பிகையிடம் மாங்கல்யபாக்கியம் அருளப் பிரார்த்தனை செய்தாள்.

ஊர் எல்லையருகே வந்ததும் உயிரற்ற மந்திரியின் உடல் மீண்டும் உயிர்பெற்று எழுந்தது. அனைவரும் திகைத்துப்போய் நிற்க, அமைச்சர் தான் எழுப்பிய சிவபெருமான் ஆலயத்திற்குச்சென்று, “பிராணனைக்கொடுத்த பிராணநாதா” என்று போற்றி வழிபட்டார். அன்று முதல் பிராணனைக்கொடுத்ததால் இறைவன் அருள்மிகு பிராணநாதேஸ்வரர் என்றும், மந்திரியின் மனைவி மாங்கல்யம் பெற்றதால் இத்தல அம்பிகை மாங்கல்யம் கொடுத்த அருள்மிகு மங்களாம்பிகை யென்றும் போற்றப்படுகின்றனர். அப்போது அமைச்சரின் மனைவி தங்களுக்குக் காட்சிதந்த பிராணநாதர் மற்றும் மங்களாம்பிகையிடம்,  “எங்களுக்குவரம்அளித்தபடி, இந்த ஆலயத்துக்கு வந்து வழிபடும் என்போன்ற மற்ற பெண்களுக்கும் மாங்கல்யபாக்கியம் அருளவேண்டும்” என்று வேண்ட அவ்வாறே அருளினர். அதன்படி மாங்கல்ய தோஷத்தையும் நீக்கி சுமங்கலி பிராப்தம் தந்தருளும் திருத்தலமாக திருமங்கலக்குடி விளங்குகிறது.

தல சிறப்பு : இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பொதுவாக கோயில்களில் சிவலிங்கத்தில், ஆவுடையாரை விட சற்று உயரம் குறைந்ததாகத்தான் பாணம் இருக்கும். ஆனால் இக்கோயிலில் பாணம், ஆவுடையாரைவிட உயர்ந்ததாக இருக்கிறது. நடராஜர் சன்னதியில் மரகதலிங்கம் ஒன்று உள்ளது.

 இரவில் திருக்கல்யாணம் : மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் போன்ற கோயில்களில் காலையில் திருக்கல்யாணம் நடந்து, மதிய வேளையில் திருக்கல்யாண விருந்து வைக்கப்படும். ஆனால், இக்கோயிலில் இரவில்தான் திருக்கல்யாணம் நடக்கிறது. பங்குனியில் நடக்கும் பிரம்மோற்ஸவத்தின் ஏழாம் நாளன்று திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு மேல் மாப்பிள்ளை அழைப்பு, சுவாமி, அம்பாள் மாலை மாற்றும் வைபவமும், ஊஞ்சல் காட்சியும் நடக்கிறது. இரவு 9 மணியளவில் சுவாமி, அம்பிகை திருக்கல்யாணமும், அதன்பின் திருமண விருந்தும் நடக்கும்.

பொது தகவல்: சிவன் சன்னதிக்குச் செல்லும்போது முன் மண்டபத்தில் மகாலட்சுமி, சரஸ்வதி இருவரும் துவாரபாலகிகள் போல இருபுறமும் காட்சி தருகின்றனர். இவ்விருவரும் இரு கால்களையும் மடக்கி பத்மாசனத்தில் அமர்ந்திருப்பது விசேஷமான தரிசனம். இதில் சரஸ்வதி வீணையில்லாமல் காட்சி தருகிறார்.  பிரகாரத்திலுள்ள நடராஜர் சன்னதியில் அடுத்தடுத்து இரண்டு நடராஜர்கள், சிவகாமி அம்பிகையுடன் இருக்கின்றனர். இதில் பிரதான நடராஜருக்கு அருகில் இருக்கும் மற்றொரு நடராஜரின் பாதத்திற்கு கீழே, பூதகணம் ஒன்று சுவாமியின் நடனத்திற்கேற்ப இசைக்கருவி வாசித்தபடி இருக்கிறது.

பிராணநாதர் கோயில் பிரகாரத்தில் சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் என இரு தீர்த்தங்களும் அருகருகில் இருக்கிறது. சிவனது இரண்டு கண்களாக இருக்கும் சூரிய, சந்திரர்களே இங்கு சிவனை குளிர்விப்பதற்காக தீர்த்தமாக இருப்பதாக சொல்வதுண்டு. சுவாமிக்கு இந்த இரு தீர்த்தத்தையும் சேர்த்தே அபிஷேகம் செய்கின்றனர்.  சிவன் சன்னதி கோஷ்டத்தில் விஷ்ணு துர்க்கை இருக்கிறாள்.
இதுதவிர, சிவதுர்க்கை சோமாஸ்கந்தர் சன்னதியின் பின்புறத்தில் காட்சி தருகிறாள். இவ்விருவரின் பாதங்களுக்கு கீழேயும் மகிஷாசுரன் கிடையாது. காவேரி, சிவன் கோஷ்டத்தில் துர்க்கைக்கு அடுத்து சிலை வடிவில் இருக்கிறாள். ஆடி பதினெட்டாம் பெருக்கின்போது இவளுக்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது.

காளி, பிரம்மா, விஷ்ணு, அகத்தியர். சூரியன், அம்பாள் ஆகாசவாணி , பூமாதேவி ஆகியோரால் பூஜிக்கப்பட்ட தலம். இங்கு முருகன்  சண்முகர்  என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
காலவமுனிவர் எனபவர் தன்ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்தபோது தனக்கு தொழுநோய் வரஇருப்பதை உணர்ந்தார். நவக்கிரகங்களை வழிபட்டால் அந்த நோயிலிருந்து விடுபடலாம் என்றுணர்ந்து நவகிரகங்களை நோக்கி கடும்தவம் மேற்கொண்டார். முனிவரின் தவத்திற்கு இரங்கி நவகிரகங்கள் அவருக்கு காட்சிதந்து முனிவரை தொழுநோய் தாக்காதிருக்க வரமும் அளித்தனர். நவகிரங்களின் இந்தசெயலை அறிந்த பிரம்மா கோபம் கொண்டார்.

நவகிரகங்களுக்கு வரம்கொடுக்கும் உரிமை கிடையாது என்றும், முற்பிறவியில் அனைத்து உயிர்களும் செய்த பாவ புண்ணியத்தின் பலனைமட்டுமே அவர்கள் தரவேண்டும் என பணித்திருந்தும் காலவமுனிவருக்கு தொழுநோய் தாக்காத வரம் அளித்ததால் நவகிரங்களுக்கு தொழுநோய் எற்பட்டு வருந்தும்படி பிரம்மா சாபமிட்டார். பின்பு நவகிரகங்கள் பிரம்மா கூறியபடி திருமங்கலக்குடி அருகேஉள்ள வெள்ளெருக்கு காட்டில் (இவ்விடம் தற்போது சூரியனார்கோவில் என்று வழங்குகிறது) கார்த்திகை மாத முதல் ஞாயிறு முதல் 12 ஞாயிற்றுக்கிழமைகள் அங்குள்ள ஒன்பது தீர்த்தத்தில் நீராடி, பின் திங்களன்று காவிரியில் நீராடி பிராணநாதேஸ்வரரையும், மங்களநாயகியையும் வழிபட்டு, பிறகு வெள்ளெருக்கு இலையில் தயிர்சாதம் புசித்து தங்களின் சாபம் நீங்கி விமோசனம் பெற்றனர்.

நவக்கிரகங்கள் தங்கள் பாவங்களை இப் புண்ணிய தலத்து இறைவனை வழிபட்டுப் போக்கிக் கொண்டமையால், நவக்கிரக கோவில்களுக்குத் தரிசனம் செய்யச் செல்லுவோர், இத்தலத்து ஸ்ரீபிராணநாதேஸ்வரரையும் இறைவி மங்களாம்பிகையையும் முதலில் தரிசித்த பின்னரே சூரியனார்கோவில் சென்று வழிபடவேண்டு மென்பது நியதி!

.

பிரார்த்தனை: நவகிரக தலங்களில் சூரிய தலமான சூரியனார் கோயிலுக்கு செல்லும் முன்பு இத்தலத்துக்கு வந்து வழிபட வேண்டும் என்பது முக்கியமாதலால் நவகிரக தோஷமுள்ள பக்தர்கள் இத்தலத்தில் வந்து வழிபட்ட பின்னரே சூரியனார் கோயில் செல்கின்றனர்.

நவகிரக தோஷம், பெண்கள் திருமண பாக்கியம்,குழந்தை பாக்கியம்,  சுமங்கலி பாக்கியம், சத்ருபயம் (எதிரிகள் பயம்) நீக்கம்பெறல்,  திருட்டுபயம் விடுபடுதல் ஆகியவற்றுக்காக பக்தர்கள் பெருமளவில் இத்தலத்தில் வழிபாடு செய்கிறார்கள்

 

நேர்த்திக்கடன்: தொடர்ந்து பதினொன்று ஞாயிற்றுக் கிழமைகள் மதியம் 12 மணிக்கும் 12.30 க்கும் இடையில் வெள்ளெருக்கு இலையில் தயிர் சாதம் நைவேத்தியம் செய்து அங்கு கோயில் பிரகாரத்தில் நடைபெறும் வழிபாடுகளிலும் பங்கு பெற வேண்டும். இப்படி செய்தால் நவகிரக தோஷம், எல்லாவிதமான வியாதிகளிலிருந்தும் விடுபடலாம். தொடர்ந்து ஐந்து வெள்ளிக் கிழமைகள் மங்களாம்பிகையை ஆராதிக்கும் பக்தர்களுக்கு மாங்கல்ய தோஷம் ராகு, கேது சனி முதலிய கிரக தோஷங்களும் விலகி திருமணத்திற்கு உரிய தடைகளும் நீங்கி மாங்கல்ய பாக்கியம் உண்டாகும். அம்மனுக்கு திருமாங்கல்யம், புடவை சாத்தி சுவாமிக்கு வஸ்திரம் படைத்து அபிசேகம் செய்து வழிபாடு செய்து 5 சுமங்கலி பெண்களுக்கு ஜாக்கெட் துணி மஞ்சள் குங்குமம் , பூ வெற்றிலை, பாக்கு, சீப்பு , கண்ணாடி வளையல், மாங்கல்ய கயிறு தட்சிணை வைத்து கொடுத்து ஆசி வாங்குதை நேர்த்திகடனாக பக்தர்கள் செய்கிறார்கள். சுவாமிக்கு நல்லெண்ணெய், மா பொடி, திரவிய பொடி, மஞ்சள் பொடி, பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், பழவகைகள், இளநீர், சந்தனம் விபூதி ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். கலசாபிசேகம் செய்யலாம்.கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.

முதல்கோயில்: கிரகங்கள் வழிபட்ட இத்தலத்தில், நவக்கிரகத்திற்கு சன்னதி கிடையாது. இங்கிருந்து சற்று தூரத்தில், நவக்கிரக திசையான வடகிழக்கில் கிரகங்களுக்கென தனிக்கோயிலே (சூரியனார் கோயில்) அமைந்திருக்கிறது. மொத்தத்தில் ஒரே கோயிலே, இவ்வாறு இரட்டைக்கோயிலாக தனித்தனியே, அமைந்திருக்கிறது. இதில் பிராணநாதர் கோயிலே பிரதான கோயில் ஆகும்.

 

மரகதலிங்கம்: நடராஜர் சன்னதியில் மரகதலிங்கம் ஒன்று இருக்கிறது. தினமும் உச்சிக்காலத்தில் மட்டும் இதற்கு பூஜைகள் செய்கின்றனர். அப்போது வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு நைவேத்யம் படைத்து, வலம்புரி சங்கில் பால், பன்னீர், தேன், சந்தனம் ஆகிய நான்கு திரவிய அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த அபிஷேக தீர்த்தத்தை பருகினால் நோய் நீங்கும் என்பது நம்பிக்கை

 

சந்தன அலங்காரம்:  ஒவ்வொரு வருடமும் தை மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையன்று முழுதும் அம்பிகையை சந்தனக்காப்பு அலங்காரத்தில் தரிசிக்கலாம். விசேஷ நாட்கள் தவிர மற்ற நாட்களில் பக்தர்கள் இந்த அலங்காரம் செய்யலாம்

இத்தலத்தில் சிறப்புஉள்ள புருஷமிருகம் என்ற பெயரில் உள்ள விக்கிரகத்தில்.மனிதன், விலங்கு, பறவை என்ற மூன்று முகங்கள் உள்ளது.

 

அன்பர்கள் இவ்வாலயத்திற்கு ஒருமுறை சென்று சிவனருள் பெற்று சிறப்பாக வாழப் பிரார்த்தித்து நிறைவு செய்கின்றேன்.

astrologer_thetiyur_mahadevDivine Astrologer
தேதியூர் V.மஹாதேவன்
Swayamvaralaya,
vedicpoojahomam.com
98417 89483, 8825609304