Welcome to SWAYAMVARALAYA. FREE...FREE...FREE ASTROLOGICAL PREDICTION.. FEEL FREE TO ASK ANY QUESTION

பூனை பூஜித்த ஒரு ஆலயம்

அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், வில்லிப்பாக்கம் , சென்னை

மூலவர்: அகத்தீஸ்வரர்

அம்மன்/தாயார்: முத்தாம்பிகை

தல விருட்சம்: சரக்கொன்றை

தீர்த்தம்: புண்டரீக தீர்த்தம்

500-1000 வருடங்கள் பழமையானது

புராண பெயர்:  வில்லிப்பாக்கம்

பிரார்த்தனை: திருமண பாக்கியம், புத்திரபாக்கியம் கிடைக்க, மனக்குறையைத் தீர்த்து சாபவிமோசனம் அடைய இங்கு வழிபடுகின்றனர்.
villipakkam1 இருப்பிடம் : சென்னை – புதுச்சேரி செல்லும் ஈ.சி.ஆர். நெடுஞ்சாலையில் கடப்பாக்கம் என்ற இடத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து சூணாம்பேடுக்கு ஏராளமான ஷேர் ஆட்டோக்கள் உள்ளன. சொந்த வாகனத்தில் சென்றால் கடப்பாக்கம் தாண்டி அடுத்துவரும் வெண்ணாங்குப்பட்டு என்ற இடத்தை அடைந்து மேற்காக பிரியும் சூணாம்பேடு சாலையில் 5 கி.மீ. பயணித்தால் இத்தலமிருக்கும் வில்லிப்பாக்கம் வரும்.

திறக்கும் நேரம்: காலை 6.30 மணி 9.30 முதல் மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

 தல வரலாறு:  கயிலையின் காப்பாளரான நந்திதேவரின் சிவபூஜைக்கு உதவிட காந்தன், மகா காந்தன் என இரு சீடர்கள் இருந்தனர். இருவரும் நந்தி தேவரின் சிவபூஜைக்காக ஒருநாள் காலைவேளையில் பூக்களைப் பறிக்க நந்தவனத்துக்குச் சென்றனர். அந்த நந்தவனத்தில் இருந்த ஒரு தடாகக் கரையில் வெண் மந்தாரைச் செடிகள் இருந்தன. அச்செடிகளிலிருந்து புஷ்பங்களைப் பறித்துக் கொண்டிருந்தபோது சில புஷ்பங்கள் கரையிலும் நீரிலுமாக விழ, கரையில் விழுந்த பூ கிளியாகவும் நீரில் விழுந்த மலர் நீர் வாழ்வனவாகவும் மாறியதைக் கண்டு இருவரும் வியப்புற்ற அவர்கள் மறுபடி மறுபடி அப்படியே செய்து விளையாடியதில் நந்திதேவரின் பூஜைக்கு உரிய நேரம் கடந்துபோனது. சீடர்களைக் காணாமல் நந்தவனத்துக்கே சென்றார் நந்திதேவர். அங்கே இருவரும் பூக்களைப் பறித்து விளையாடிக்கொண்டிருந்ததைப் பார்த்ததும் நந்தி தேவருக்கு கோபம் வந்தது.

அதேசமயம் நந்திதேவரைப் பார்த்துவிட்ட இருவரில் காந்தன் பூனையாகப் பதுங்க, மகாகாந்தன் திருதிருவென விழிக்க… அவர்கள் இருவரையும் பூனையாகவும் வேடுவனாகவும் மாறும்படி சபித்தார் நந்திதேவர். சீடர்கள் தங்கள் தவறை உணர்ந்து சாப விமோசனம் கேட்க; நந்திதேவரும் மனமிரங்கி பூவுலகத்தில் காஞ்சி மாநகருக்குத் தென்கிழக்கில் ஐந்து காத தூரத்தில் புண்டரீக புஷ்கரணி தீர்த்தத்தின் அருகிலேயே அகத்தீஸ்வர மகாலிங்கம் இருக்கிறது. அங்குச் சென்று அகத்தீஸ்வரரை பூஜித்துவந்தால், உரிய காலத்தில் சாபம் விலகும் என்றார்.

நந்திதேவரின் சாபத்தின்படி காந்தன் பூனையாகவும் மகா காந்தன் வேடுவனாகவும் பூவுலகில் தோன்றினர். ஒருவரை ஒருவர் அறியாமலே புண்டரீக புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி தீர்த்தத்துக்கு அருகில் இருந்த அகத்தீஸ்வரரை வழிபட்டு வந்தனர். ஒருநாள் பூனையானது தீர்த்தத்தில் நீராடி விட்டு சிவபூஜை செய்து கொண்டிருந்த அதே சமயத்தில் வேடுவனும் ஈசனை வழிபட வந்தான். பூஜைக்கு இடையூறாக பூனை இருப்தைக் கண்டு, கோபமுற்று வில்லை வளைத்து பாணத்தைப் பூட்டி பூனையை நோக்கி விடுத்தான்.

அந்த அம்பு பூனையின்மீது படாமல் சிவலிங்கத்தின் மீது பட்டு ரத்தம் வடிந்தது. அதே சமயம் காந்தனும் மகாகாந்தனும் சாபம் விலகி சுய உருப்பெற்றனர். பின்னர், நடந்துவிட்ட தவறுக்கு மன்னிப்புக் கேட்டு ஈசனிடம் மன்றாடினார்கள். ஈஸ்வரனும் அவர்களுக்குக் காட்சி கொடுத்து அருள்பாலித்தார். அப்போது அவரிடம் நாங்கள் பூஜித்ததற்கு அடையாளமாக கிராத மார்ஜலீஸ்வரர் என்னும் இந்த ஊர் கிராத மார்ஜலாபுரம் என்று பெயர் பெற்று விளங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ள… அவ்வாறே இறைவன் இங்கே திருக்கோயில் கொண்டார் என்கிறது தல வரலாறு.

தலபெருமைபிரம்மா, விஷ்ணு, அகத்தியர், இந்திராதியர் அனைவருமே இத்தலத்து ஈசனை வணங்கி பேறு பெற்றுள்ளனர். தெற்குப் புறம் நோக்கிய நுழைவாயில் வழியாக உள்ளே நுழைந்தால் கிழக்கு நோக்கிய கருவறையைக் கொண்டு பிரமாண்டமாக கோயில் அமைந்துள்ளது. கலைநயம் சொட்டும் தூண்களைக் கொண்ட வெளிமண்டபத்தில் தெற்கு நோக்கியவளாக முத்தாம்பிகை என்ற திருநாமத்தைத் தாங்கி அம்பிகை சன்னதி கொண்டிருக்கிறாள். நின்ற கோலத்தில் பின்னிரு கைகள் பாசங்குசம் தாங்கிட, முன்னிரு கைகள் அபய வரதம் காட்டிட, தரிசிக்க வரும் பக்தர்களின் மனக்குறையைத் தீர்த்து வைப்பவளாக காட்சி கொடுக்கின்றாள் அம்பிகை.

துர்க்கை இத்தலத்தில் வெகு அபூர்வமான காட்சியாக ஆறுகரங்கள் கொண்டு, தனுர்பாணம், கட்கம், கடிகஸ்தம், சங்கு சக்கரம் தாங்கியவளாகவும் தலைக்குமேல் குடை இருக்க, அற்புதக் கோலத்தில் அருள்பாலிக்கின்றார். வடகிழக்கில் நவகிரக சன்னதியும், பைரவர் சன்னதியும் அமைந்துள்ளன. இங்கு வெளிப்புற சுற்றுச் சுவரின் உள்புறத்தில் ஐயப்பன் சந்நியாச கோலத்தில் அமர்ந்து தவம் செய்வது போலக் காட்சி கொடுக்கிறார்.

மகாமண்டபத்தின் முன்பாக பலிபீடம், கொடிமரம், நந்திதேவர் காட்சிகொடுக்க, உட்பிராகாரத்தில் கருவறை முன்பாக காப்பாளராக சுதேகர் சுபாகு இருக்க, முன்னவராக விக்னேஷ்வரர் அமர்ந்திருக்கின்றார்.  கருவறையில் அகத்தீஸ்வரர் அற்புதமான லிங்க வடிவத்தினராக காட்சி தருகிறார். உள்சுற்றில் சப்தமாதர், நாகராஜர், நாகேந்திரன் சன்னதிகள் உள்ளன. கருவறைக்குப் பின்புறம் கங்காதேவி சிவபிரானை பூஜித்ததை நினைவுகூரும் வகையில் ஈஸ்வரன் ஏகபாத மூர்த்தியாக அமர்ந்ததுடன் கங்காதேவியுடன் ராதநாதர், கௌமாரி அம்பாள், வீராடன், சூரநாதர், அன்னபூரணி வீற்றிருக்கின்றனர்.

அதுமட்டுமன்றி காசிவிஸ்வநாதர், விசாலாட்சி, சுப்ரமணியர் ஆகிய தெய்வங்களும் தனிச்சன்னதி கொண்டு அருள்பாலிக்கின்றனர். கருவறை கோட்டத்தில் நிருத்திய கணபதி, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா உள்ளனர். கங்காதேவி இத்தலத்து தீர்த்தமான புண்டரீக புஷ்கரணியில் நீராடி இத்தலத்து ஈசனை தொழுதது சிறப்பாகும்

இத்தலத்தில் சிவாச்சாரியப் பெருமக்கள் பக்தியுடனும் பூஜை செய்து திருவருட்பிரசாதம்  கொடுக்கின்றனர்

இத்தலத்தை வணங்கும்பேறு எனக்கும் என் துணைவி யார்க்கும் கிடைத்தது.   அன்பர்கள் இவ்வாலயத்திற்கு ஒருமுறை சென்று சிவனருள் பெற்று சிறப்பாக வாழப் பிரார்த்தித்து நிறைவு செய்கின்றேன்.

 Divine Astrologer
தேதியூர் V.மஹாதேவன்
Swayamvaralaya,
vedicpoojahomam.com
98417 89483,7299 424347