– வனஜா மஹாதேவன்
மூன்று கோடி தேவர்களும், தேவதைகளும் வழிபட்ட தலம் காசிக்கு இணையான தலமாகக் கருதப்படுவது, திருக்கோடிக்காவல்.
இத்தலத்திற்கு பல சிறப்புகள் உண்டு. ஒரு சமயம் கைலாயத்தையும் திருக்கோடிக் காவலையும் ஒரு தராசில் வைத்துப் பார்த்தப் போது இத்தலம் உயர்ந்து கைலாயம் கீழே போய்விட்டதாம்.
என்னுடைய திருமேனிக்கு சமமான பெருமை கொண்ட பூமி இது. இங்கு செய்யும் ஜபம், தியானம், ஹோமம் யாவும் மும்மடங் காக பலன் தரும். உத்திரவாஹினி யாக இங்கு இருக்கும் காவிரியில் கார்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் விடியற்காலையில் நீராடினால் அனைத்துப் பாவங்களும் தொலைந்து போகும் என இத்தலம் குறித்து சிவபெருமான் அருளியுள்ளதாக ஐதிகம்.
இத்தலத்தின் சக்தியை விவரிக்கும் புராணக் கதை ஒன்று உள்ளது. நெறி தவறிய வாழ்க்கை நடத்திய லோக காந்தா என்ற பெண் தனது இறுதிக் காலத்தில் இத்தலத்தில் வாழ்ந்து வந்தாள். அவள் மரணமடைந்ததும் எமதர்மன் அவளை நரகலோகம் அழைத்துச் சென்றான். சிவ தூதர்கள் இந்தச் செயலை வன்மையாகக் கண்டித்தனர். சிவபெருமானிட மும் சென்று முறையிட்டனர்.
தனது தலமான திருக்கோடிக்காவலோடு சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்க எமனுக்கு அதிகாரம் இல்லை என்றும், இத்தலத்துக்கு வந்தவர்களை எமன் கண்ணெடுத்தும் பார்க்கக் கூடாது என்றும் சிவபெருமான் உத்தரவிட எமன் வேறு வழியின்றி அந்தப் பெண்ணை விட்டு விட்டுத் திரும்பினான். அவளும் எமனிடமிருந்து விடுபட்டு முக்தி அடைந்தாள்.
இத்தலத்தில் இறைவன் திருநாமம் கோடிகா ஈஸ்வர். இறைவி வடிவம்மை திரிபுர சுந்தரி என்பது அம்பிகையின் இன்னொரு பெயர்.
தீர்த்தம் சிருங்க தீர்த்தம்: தலமரம் பிராம்பு.
கிழக்கு நோக்கி அமைந்துள்ள ஆலயத்தின் ஐந்து நிலை ராஜகோபுரத்தை கடந்து உள்ளே செல்கிறோம். நந்தி, பலிபீடம் கண்ணில் படுகின்றது.
ராஜகோபுர வாயிலில் காமதேனு, கற்பக விருட்சம், குதிரை மற்றும் யானையிலமர்ந்து போர் புரியும் வீரர்கள், மனுநீதி சோழனின் நீதி வரலாறு ஆகிய காட்சிகள் மிக நுணுக்கமாக செதுக்கப்பட்டிருக்கும் அழகு எங்களை வியக்க வைக்கிறது.
இரண்டாம் கோபுரத்திலிருந்து அம்பாள் சன்னதி வரை கருங்கல்லாலான மகா மண்டபம் அமைந்துள்ளது. ஆலயம் இரண்டு சுற்றுகள் கொண்டதாக உள்ளது. மேற்கு பிரகாரத்தில் நாகலிங்கம், காசி விசுவநாதர், விசாலாட்சியும், கிழக்கு பிரகாரத்தில் கால பைரவர், சூரியன், சந்திரன், நாதஸ்வரர், சண்டிமீட்டேஸ்வரர், கஹேர்னேஸ்வரர். பாலசனீஸ்வரர் உள்ளனர்.
வடக்கு பிரகாரத்தில் சண்டீஸ்வரர் சன்னதியும் பிரம்மா சன்னதியும் உள்ளன.
தெற்கு பிரகாரத்தில் கணபதி, சரஸ்வதி, லட்சுமி தேவியின் சன்னதிகள் உள்ளன.
தென்மேற்கு மூலையில் கரையேற்று விநாயகர் வீற்றுள்ளார். இவர், அகத்தியரால் மணலில் பிடித்து பிரதிஷ்டை செய்யப்பட்ட மூர்த்தம். காலப் போக்கில் அதன் உருவம் சற்றே கரைந்து போயிருப்பினும் அதன் பழமையும் தூய்மையும் எங்களை கவருகின்றது.
தேவ கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, பிச்சாண்டவர், துர்க்கை, அர்த்தநாதீஸ்வரர் உள்ளனர்.
இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் இறைவன் நவகிரகங்களின் சக்தியை தானே ஏற்றுக் கொண்டுள்ளதால் அவரை வழிபட்டாலே நவக் கிரகங்களை வழிபட்ட பலனை அடையலாம் என்றும் இந்த ஆலயத்தில் நவக்கிரகங்கள் கிடையாது என்று அங்கு உள்ளவர்கள் கூறும்போது ஆச்சர்யமாக உள்ளது.
சுவாமி சன்னதியின் வெளி மண்டபத்தின் இருபுறமும் எமதர்மனும் சித்ரகுப்தனும் பணிவுடன் சிலையாக நின்று கொண்டிருக் கின்றனர். அதற்குக் காரணமாக ஒரு சம்பவம் சொல்லப் படுவதுண்டு என்கின்றனர்.
ஒரு முறை இத்தலத்து இறைவனைக் காண எமதர்மன் அவசரமாக உள்ளே நுழைய, இறைவன் அம்பிகையுடன் பேசிக் கொண்டி ருக்கிறார். எனவே சற்று காத்திருங்கள். உங்களால் காத்திருக்க முடியாது என்றல் சித்ர குப்தனை வெளியே நிற்கச் சொல்லுங்கள் என்று நந்திதேவர் கூற, இருவருமே நின்று விட்டனராம். அவர்கள் தான் சுவாமி சன்னதிக்கு வெளியே நிற்கும் எமதர்மனும் சித்ரகுபதனும் என்கின்றனர். கர்ப்பகிரக நுழைவாயிலில் பெரிய வடிவில் இரண்டு துவார பாலகர்களில் சிலைகள் உள்ளன. உள்ளே இறைவன் திருக்கோடீஸ்வர லிங்கத் திருமேனியில் அருள் பாலிக்கிறார்.
மூன்று கோடி தேவர்களும் மூன்று கோடி மந்திர தேவதைகளும் இத்தலத்து இறைவனை வழிபட்டு அருள் பெற்றுள்ளனர் என்பதை நினைக்கும்போது மெய் சிலிர்க்கிறது.
வெளியே அம்பாள் திரிபுரசுந்தரியின் சன்னதி உள்ளது. அன்னை தென் முகம் பார்த்து பாச அங்குச, வரத முத்திரைகளுடன் காட்சி தருகிறாள். இத்தலத்திற்கு சம்பந்தர் பதிகம் ஒன்றும், அப்பர் பதிகம் மூன்றாக நான்கு பதிகங்கள் உள்ளன.
ஹரிதத்தர் என்று ஒரு சிவனடியார் இருந்தார். வைணவ குலத்தில் தோன்றிய இவர் சிவமே பரம்பொருள் என வாழ்ந்து வந்தார்.
இவர் திருவாலங்காடு, திருவாடுதுறை, தென் குரங்காடுதுறை, திருமங்கலக்குடி, திருமாந் துறை, திருக்கோடிக்கா ஆகிய தலங்களை தினசரி தரிசித்து விட்டு அர்த்தஜாம வழி பாட்டுக்கு கஞ்சனூருக்கு வருவது வழக்கமாம்.
ஒரு நாள் பெருமழை பெய்தது. ஹரிதத்தரால் திருக்கோடிக்காவிலிருந்து கஞ்சனூருக்குச் செல்ல இயலவில்லை. மனம் வருந்திய அவரை நாடி ஓர் பக்தன் வந்தான். அவருக்குத் துணையாக இருந்து அவரை கஞ்சனூருக்கு அழைத்துச் சென்றான்.
கஞ்சனூரில் அர்த்த ஜாம வழிபாட்டை இனிதாக முடித்த ஹரிதத்தர் கோயிலில் தனக்கு பிரசாதமாகக் கிடைத்த அன்னத்தை யும் சுண்டலையும் அந்த பக்தனுக்கும் கொடுத்தார். மறுதினம் திருக்கோடிக் காவல் வந்து இறைவனை தரிசித்த ஹரிதத்தருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அவர் அந்த பக்தனுக்கு கஞ்சனூரில் தந்த அன்னமும் சுண்டலும் இறைவன் முன்னே படைக்கப்பட்டிருந்தது.
ஹரிதத்தருக்கு அப்பொழுது உண்மை புரிந்தது. தனக்கு வழித்துணையாக வந்தவர் திருக்கோடிக்கா ஈஸ்வரர்தான் என்பதை உணர்ந்து மனம் நெகிழ்ந்தார். ஹரிதத்தர். இவ் வாலயம் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை யானது. இத்தலத்தில் வசிப்பவர்களுக்கு காசியைப் போல எம பயம் கிடையாது. இந்த ஊரில் மயான பூமி என்று தனியாகக் கிடையாது. இவ்வூரில் வசிப்பவர்களை காவிரி நதியின் மறுகரைக்குக் கொண்டு சென்று தகனம் செய்யும் பழக்கம் ஆதிகாலம் முதல் இன்று வரை நடந்து வருகிறது.
தன்னை வணங்குபவர்களை எமபயத்தி லிருந்து காத்தருளும் இத்தலத்து இறைவனை நாமும் ஒரு தரிசித்து மனம் குளிர வெளி வருகிறோம். தஞ்சை மாவட்டம், கும்பகோணத் திலிருந்து 20 கி.மீ. தொலைவிலும் சூரியனார் கோவிலிருந்து 6 கி.மீ. தொலை விலும் உள்ளது திருக்கோடிக் காவல்