peraiyur5பேரையூர் நாகநாதசுவாமி கோவில், புதுக்கோட்டை மாவட்டம்

ராகு– கேது தோஷம் போக்கும் திருத்தலம்

பிரார்த்தனை: நாகராஜன்– நாகக் கன்னிகைகள் வணங்கி வழிபட்ட தலம், ராகு– கேது தோஷம், , திருமணப்பேறு, குழந்தைப்பேறு , மற்றும் மனக்குறையை போக்கும் திருதலம் ஆகும்.

அமைவிடம் : இந்த ஆலயமானது, புதுக்கோட்டை மாவட்டம், பேரையூரில் வெள்ளாற்றங்கரைக்கு தெற்கே அமைந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டத்தில், புதுக்கோட்டையில் இருந்து தென்மேற்கே 15 கிலோமீட்டர் தொலைவில் வெள்ளாற்றிற்கு தெற்கே, பேரையூரில் இக்கோவில் அமைந்துள்ளது. புதுக்கோட்டை– பொன்னமராவதி வழித்தடத்தில் பேரையூர் விலக்கு நிறுத்தத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து ஆட்டோ மூலம் 2 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து ஆலயத்தை அடையலாம்

மூலவர்: நாகநாதர். அம்மன்/தாயார்: பிரகதாம்பாள்.

புராண பெயர்:  செண்பகவனம், கிரிஷேத்திரம்.

தல விருட்சம்: பின்னை மரம்.

தீர்த்தம்: ஓங்கார சுனை மற்றும் சிவகங்கை தீர்த்தம்.

நிர்வாகம்: புதுக்கோட்டை சமஸ்தானத்து ஆலயமான இத்திருக்கோவிலை, இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் செய்து வருகின்றனர்.

 நடைதிறந்திருக்கும் நேரம்: காலை 7.30 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4.15 மணி முதல் 7 மணி வரையிலும் இறைவனை தரிசிக்க கோவில் நடை திறந்திருக்கும்.

periyur1புராண வரலாறு : பதினெட்டு தீவுகளுக்கும் மன்னனாக விளங்கியவர் சலேந்திரன் என்பவர், நாள்தோறும் சிவபூஜை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான். யாரும் இல்லாத வேளையில் தினந்தோறும் நாகக்கன்னிகளும் இந்த இறைவனுக்குப் பூஜை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஒரு சமயம் சலேந்திரன், நாகக் கன்னிகளில் ஒருத்தியைக் காண நேர்ந்தது. அவள் அழகில் மயங்கிய மன்னன், அவள் மீது காதல் கொண்டான். இதனால் இறைவன் கட்டளைப்படி, நாகலோகத்தில் வாழும் நாகராஜனுக்கு மகனாகப் பிறந்து நாக கன்னிகையை மணந்து வாழ்ந்தான். எனினும் சிவபூஜையை அவன் தொடர்ந்து செய்து வந்தான்.

அவனுக்காக ஆலய புஷ்கரணியில் பிலத்துவாரத்தின் வழியே நாக கன்னிகைகள் பூலோகத்துப் “பேரையூர்”  வந்து பூப்பறித்துச் சென்றனர். இடைவிடாத பூஜைகளினால் மனம் மகிழ்ந்த இறைவன், சலேந்திரனை அழைத்துவர நந்தியெம்பெருமானிடம் கேட்டுக்கொண்டார்.

அங்கு தோன்றிய இறைவனைத் தன்னுடைய நாகலோகம் வந்து நடனமாட வேண்டும் என வரம் கேட்டான். அதன்படியே இறைவன், வாத்திய இசையுடன் நடனமாடினார். அந்த இசை பேரையூர் புஷ்கரணியில் ஒலித்தது. அதன்பின் ஆண்டுக்கு ஒருமுறை இந்நடனத்தை பங்குனி மாதத்தில் நிகழ்த்தி வருகிரார். இதை நிரூபிக்கும் வகையில், இன்றும் பங்குனி–சித்திரை மாதத்தில் ஒருநாள் புஷ்கரணியில் இசை முழக்கம் கேட்பதாக ஆலய அர்ச்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

periyur2ஆலய அமைப்பு : கிழக்கு நோக்கி அமைந்துள்ள இவ்வாலயத்தின் எதிரே மிகப்பெரிய திருக்குளம் அமைந்துள்ளது. ஆலயத்தின் மதில் சுவர்களிலும் ஏராளமான கல் நாகர்கள் அமைந்திருப்பது நம் கண்ணுக்கு விருந்தாக அமைந்துள்ளது. வியந்தபடி மேற்கே நடந்தால், பிரம்மாண்டமான  துவாரபாலகர்கள் ராஜகோபுர வாசலில் காவல் நிற்கின்றனர். ராஜகோபுர நுழைவு வாசலைத் தாண்டினால், பலிபீடம், கொடிமரம், நந்திதேவர் அமர்ந்த மண்டபமும் அமைந்துள்ளன. அதன் அருகே, ஓங்கார வடிவில் பிலத்துவாரம் கொண்ட புஷ்கரணி அமைந்துள்ளது.  அதன் சுவர் மீதும் அழகிய கல் நாகர்கள் அணி வகுத்து அமர்ந்துள்ளனர். இந்த சுனையின் கரையில் சூலம் ஒன்று செதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடும் அளவிற்கு நீர் மட்டம் உயரும் போது  பல்வேறு மிருதங்க ஓசை கேட்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

periyur3இது பங்குனி மற்றும் சித்திரை மாதத்தில் தொடர்ந்து நிகழ்ந்து வருவதாக நம்பப்படுகிறது. புஷ்கரணி அருகே கல் நடராஜர், சிவகாமி அம்மையும் காட்சி தருகிறார்கள். அதன் அருகே விநாயகர் சன்னிதி அமைந்துள்ளது. அதனை அடுத்து சுமார் 4 அடி உயர நாகராஜர் சிலை காணப்படுகிறது. பரிகாரங்கள் அனைத்துமே இவருக்கு மட்டுமே செய்யப்படுகிறது. இதன் அருகே தனிச் சன்னிதியில் ரிஷப தேவர் மீது இறைவனும், இறைவியும் சிலா வடிவில் அமைந்துள்ளது  கண்கொள்ளாக் காட்சியாகும். இதன் இடதுபுறம் வள்ளி–தெய்வயானை சமேத ஆறுமுகப்பெருமான் சன்னிதி இருக்கிறது.

அதனை அடுத்து தனிச் சன்னிதியில் பெரியநாயகி எனும் “பிரகதாம்பாள்”  கிழக்கு முகமாய் நின்ற கோலத்தில் எழிலுடன் காட்சி தருகின்றாள். அம்மன் சன்னிதி எதிரே தனி கொடி மரமும், அதன் அருகே பைரவர் சன்னிதியும் அமைந்துள்ளன. சன்னிதியின் எதிரே நவக்கிரக சன்னிதி உள்ளது.

periyur4தனிச்சிறப்பு : அனைத்துக் கிரகங்களும் சூரியனை மட்டுமே வணங்கி நிற்பது தனிச்சிறப்பு ஆகும். ஆலயத்தை வலம் வந்தால், கருவறை சுவரில் விநாயகர், அதன் அடிப்பகுதியில் வளர்ந்து வரும் சுயம்பு லிங்கம் காணப்படுகிறது. கன்னி மூலை கணபதி, லிங்கோத்பவர், துர்க்கை, சண்டிகேஸ்வரர், சண்டிகேஸ்வரி ஆகியோர் விக்கிரகங்களும் உள்ளன.

காவல் தெய்வம்: ஆலயத்தின் வெளிப்புறம் சற்றுத் தொலைவில் நான்கு திசை களிலும் கிழக்கே இரட்டை விநாயகர், தெற்கே பொய்யாத விநாயகர், மேற்கே தேவ விநாயகர், வடக்கே தொடுவாய் விநாயகர் என நான்கு புறமும் காவல் தெய்வங்களாக இத்திருக்கோவிலில் அமைந்திருப்பது அரிதான சிறப்பு அம்சமாகும் ஆகும்.

astrologer_thetiyur_mahadevவிழாக்கள் : ஆண்டுதோறும் பங்குனி மாதம் கடைசி வாரத்தில் தொடங்கி சித்திரை முதல் வாரம் வரை நாகநாதசுவாமிக்கு பிரம்மோற்சவம்  நடைபெறுகிறது. தமிழ்ப் புத்தாண்டுக்கு முதல் நாள் தேர்த்திருவிழா நடைபெறுகிறது இது தவிர, ஆடிப்பூரத்தில் பெரியநாயகி அம்பாளுக்கு 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும். இங்கே விநாயகர் சதுர்த்தி, பிரதோஷம், கிருத்திகை போன்ற விழாக்களுக்கு முக்கியத்துவம் இல்லை.

இவ்வாலயத்தை வணங்கும்பேறு எனக்கும் என் துணைவி யார்க்கும் கிடைத்தது.   அன்பர்கள் இவ்வாலயத்திற்கு ஒருமுறை சென்று சிவனருள் பெற்று சிறப்பாக வாழப் பிரார்த்தித்து நிறைவு செய்கின்றேன்.

 Divine Astro

loger

தேதியூர் V.மஹாதேவன்
Swayamvaralaya,
Vedicpoojahomam.com
98417 89483, 7299 424347