விரைவில் திருமணம் நடைபெறதடைபட்ட திருமணம் நடக்க,

புத்திர சோகம் நீங்க அருள்பாவித்ததலம்.

மூலவர்: வனதுர்கா பரமேஸ்வரி

உற்சவர்: வனதுர்கா

தீர்த்தம்: தாமரை

ஆகமம்/பூஜை: சிவாகமம்

பழமை: 2000-3000 வருடங்களுக்கு முன்

புராண பெயர்: கதிர்வேய்ந்த மங்கலம்

ஊர்: கதிராமங்கலம்

kathiramangalamசிறப்பம்சம்:  அதிசயத்தின் அடிப்படையில்  பொதுவாக துர்க்கை வடக்கு அல்லது மேற்கு நோக்கி அருள்பாலிப்பது வழக்கம். ஆனால் இங்குள்ள வனதுர்க்கை கிழக்கு நோக்கி தனிக்கோயிலில் அருள்பாலிப்பது சிறப்பு. இத்தல அம்மன் வலதுகை சாய்ந்த நிலையில் அபய ஹஸ்தம், வரதம் என இரண்டு முத்திரைகளைக் காட்டி அருள்பாலிப்பது வேறு எந்த அம்மனிடத்திலும் காணமுடியாத தனி சிறப்பு.  இவளுக்கு அர்ச்சனை செய்யும் போது அம்பாளின் வலதுகரத்தில் உள்ளங்கையில் வியர்வை முத்துக்கள் வெளிப்படுவது சிறப்பு

பொது தகவல்: இந்தக் கோயிலில் மூன்று நிலை, ஐந்து கலசங்களுடன் கூடிய கிழக்குப் பார்த்த ராஜகோபுரமும், அம்மனுக்கு மேல் ஒரு கலசத்துடன் கூடிய ஏகதள விமானமும் அமைந்துள்ளது. கோயிலுக்கு எதிரில் கோயில் தீர்த்தமான தாமரைத் தடாகம் உள்ளது. கோயிலுக்கு வடக்கே யாகசாலையும், அன்னதானக்கூடமும் அமைந்துள்ளது. அம்மனுக்கு எதிரில் அம்மனின் சிம்ம வாகனம் அமர்ந்த நிலையில் உள்ளது. அம்மனின் கர்ப்பகிரக நுழைவு வாசலுக்கு மேல்  சைலபுத்ரி, பிரம்மசாரிணி, சண்டகண்டீ, கூஷ்மாண்டீ, ஸ்கந்தமாதா, சித்தி தாயிணி, காத்யாயிணி, காலராத்ரி, மஹாகவுரி ஆகியோரது சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. நுழைவுவாசலின் இருபுறமும் துவாரபாலகிகள் உள்ளனர்.

அனைத்துக் கிழமைகளிலும் வரக்கூடிய ராகுகாலத்தின் போது இவளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்படுகிறது.  தமிழ்நாட்டில் வனதுர்க்கைக்கென இங்கு மட்டுமே தனிக்கோயில் அமைந்துள்ளது.  மிருகசீரிஷம் நட்சத்திரத்திற்கு இவளே அதிதேவதை.

பிரார்த்தனை: குலதெய்வம் தெரியாதவர்கள் இவளை குலதெய்வமாக எண்ணி வழிபடுகின்றனர். குடும்ப விருத்திக்காக சந்தன அபிஷேகமும், எதிரிகள் தொந்தரவு  நீங்க குங்கும காப்பு சாற்றி, செவ்வரளி அர்ச்சனை செய்தும் பிரார்த்தனை செய்யப்படுகிறது. தோஷங்கள் விலக திருமஞ்சனக் காப்பு சாற்றி வேண்டிக் கொள்கின்றனர். விரைவில் திருமணம் நடைபெற, தடைபட்ட திருமணம் நடக்க, கல்வியில் சிறக்க, தேர்வில் வெற்றி பெற, வழக்குகளில் வெற்றி பெற, வியாபாரம் விருத்தி அடைய, குழந்தை பாக்கியம் கிடைக்க இங்குள்ள துர்க்கையை வழிபட்டுச் செல்கின்றனர்

நேர்த்திக்கடன்: பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து, நெய் விளக்கேற்றி, புடவை சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர். அத்துடன் செல்வம் சேர செந்தாமரை மலரையும், மன அமைதி பெற மல்லிகைப் பூவையும், கடன் தீர செவ்வந்திப் பூவையும், குடும்ப ஒற்றுமைக்கு செவ்வரளி பூவையும், தம்பதி ஒற்றுமைக்கு மனோரஞ்சிதம் பூவையும், உறவுகள் ஒற்றுமைக்கு மரிக்கொழுந்துப் பூவையும், தொழில் வெற்றி பெற செம்பருத்திப் பூவையும், திருமணம் கூட ரோஜா, மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்வது சிறப்பு.

திருமண பாக்கியம் கிடைக்க கன்னிப் பெண்கள் மஞ்சள் நிற மலர்கள், செம்பருத்தி, பவள மல்லிகையால் அர்ச்சனை செய்தும், தயிர்சாதம் நிவேதனம் செய்தும் வழிபடுகின்றனர். பெண்கள் எலுமிச்சை விளக்கு ஏற்றும் போது “சர்வ மங்கள மாங்கல்யே! சிவே சர்வார்த்த சாதகே! சரண்யே திரியம்பிகே! தேவி நாராயணி நமஸ்துதே!” என்று தொடர்ந்து 11 வாரங்களும், ராகுதோஷம் உள்ளவர்கள் கூடுதலாக மேலும் சில வாரங்களும் செய்ய வேண்டும். இவர்கள் செவ்வாய் விரதமிருந்து அம்மனை வழிபடுதல் சிறப்பு. பால் அபிஷேகம் செய்து, குங்கும அர்ச்சனை செய்தால் மாங்கல்ய தோஷம் நீங்கும்,

தலபெருமை: ஆரம்ப காலத்தில் இந்த அம்மனின் சிலைக்கு மேல் மேற்கூரை எதுவும் இல்லாமல் திறந்த வெளியாக இருந்துள்ளது. ஆனால் காலப்போக்கில் அம்மனுக்கு மேல் தனி விமானம் கட்டப்பட்டுள்ளது. வெயிலும், மழையும் அம்மனின் மேல் விழும்படியாக அம்மனின் தலைக்கு மேல் ஒரு சிறு துவாரம் உள்ளது. இதன் வழியாகத்தான் அம்பாள் தினமும் காசிக்கு சென்று வருவதாக ஐதீகம். இதனால் இவளுக்கு ஆகாச துர்க்கை என்ற பெயரும் உண்டு. இந்த அம்மனின் சிலை அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, மிருகண்டு மகரிஷியால் பூஜிக்கப்பட்டது. துன்பத்தை துடைப்பவள் துர்க்கை, சகல தெய்வ சக்திகளும் ஒன்றாகி துர்க்கையாகப் பொலிவதால் இவளை வழிபட்டாலே சகல தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும்.

ராகுகாலத்தில் துர்க்கையை பூஜிப்பது மிகவும் ஏற்றது. ராகு காலம் என்பது துர்கா தேவியை ராகு கிரகம் வழிபடும் நேரம். எனவே அந்த நேரத்தில் நாம் அனைவரும் துர்க்கையை வழிபடும் போது ராகுவின் பரிபூரண அருள் நமக்கு கிடைக்கும். எனவே தான் ராகு திசை அல்லது ராகு புத்தி நடப்பவர்கள் துர்க்கையை வழிபட வேண்டும் என்பது ஐதீகம்.

ராகு கால நேரத்தில் துர்க்கைக்கு நெய் விளக்கேற்றியும், 108 அல்லது 54 என்ற எண்ணிக்கையில் எலுமிச்சை மாலை சாற்றியும் வழிபடுகின்றனர். ராகுவிற்கு உகந்த நாட்கள் ஞாயிறு, செவ்வாய், வெள்ளி. செவ்வாய் பவுர்ணமி மிகவும் சிறந்தது.

பொதுவாக ராகுவுக்கு அதிதேவதை துர்க்கை என்பதால் அம்பாளின் திருவுருவம் அப்படியே அமைந்துள்ளது. முன்பக்கம் அம்பாள் உருவத்தைப் போலவும், பின்பக்கம் பாம்பு படம் எடுத்தது போலவும் அமைந்துள்ளது. ஆகம விதிப்படி விநாயகர் சன்னதி இல்லாமல் எந்த ஒரு ஆலயமும் அமைவதில்லை. ஆனால் இங்கே விநாயகர், அம்பாளுடனே கலந்திருப்பதாக ஐதீகம்.  மேலும் மற்ற தலங்களில் சிம்மவாஹினியாக அல்லது மகிடனை வதைத்த அறிகுறியாக மகிஷாசுரனைப் பாதத்தில் கொண்டே காட்சி தருவாள். ஆனால் இங்கு மகாலட்சுமியின் அம்சமாக தாமரைப்பூவில் எழுந்தருளியுள்ளாள் வனதுர்க்கை. இத்துர்க்கையை ராகு கால துர்க்கை என்பர். இவள் தனது வலது மேற்கரத்தில் பிரத்தியேக சக்கரம் (தீவினையறுக்க), இடது மேற்கரத்தில் அபயம் கூறும் சங்கு, வலதுகீழ் கரத்தில் அபய வரத ஹஸ்தம், இடது கீழ் கரம் ஊர்த்து விஹாஸ்தம் (இடுப்பில் கை வைத்த எழிலான பாவனை) கொண்டு,  தாமரை பீடத்தில்  நின்ற கோலத்தில் அருளுகிறாள்.

திறக்கும் நேரம்: காலை 8 மணி முதல் 1 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி: செயல் அலுவலர், அருள்மிகு வனதுர்கா பரமேஸ்வரி திருக்கோயில், கதிராமங்கலம்-612 106, திருவிடைமருதூர் தாலுகா, தஞ்சாவூர் மாவட்டம்.

போன்: +91 4364 232 344, 232 555

அன்பர்கள் இவ்வாலயத்திற்கு ஒருமுறை சென்று வனதுர்கா பரமேஸ்வரி அருள் பெற்று சிறப்பாக வாழப் பிரார்த்தித்து நிறைவு செய்கின்றேன்.astrologer_thetiyur_mahadev

Divine Astrologer
தேதியூர் V.மஹாதேவன்
Swayamvaralaya,
vedicpoojahomam.com
98417 89483, 8825609304