காஞ்சி மஹாபெரியவாளும் இடி மின்னலும்
8.8.2013 இன்று குரு வாரமாக இருந்ததால், காஞ்சிபுரம் மஹாபெரியவாள் சன்னதி சென்று தரிசித்து வரலாம் என்று காலையில் கிளம்பினோம்.
ஆடி மாதமாக உள்ளது காஞ்சி காமாக்ஷிக்கு ஒரு புடவை சாத்தி வரலாம் என்று என் மனைவி கூறினாள்.
சரி என்று அதையும் எடுத்துக்கொண்டு கிளம்பினோம். காமாக்ஷி அம்மன் கோயிலுக்கு சென்றவுடன் அங்குள்ள சிப்பந்திகளிடம் அம்மனுக்குப் புடவை சாத்த வேண்டும் என்று கூறினேன்.
அவர்கள் என்ன புடவை… பட்டுப்புடவையா? என்று கேட்டனர்.
நாங்கள் இல்லை காட்டன் புடவை என்றோம்.
உடனே முகம் சுளித்துக்கொண்டு அதெல்லாம் இப்ப சாத்த முடியாது. அப்புறம் பார்க்கலாம் என்று கூறினார்கள். உடனே அலுவலகத்திற்கு சென்று விபரத்தை கூறியவுடன், அவர்களும் சரி.. சரி.. உள்ளே போங்கோ பார்க்கலாம் என்று அலட்சியமாக கூறினார்கள்.
அங்கு உள்ளே உள்ள கேட் சிப்பந்திகள் நீங்கள் யார் சொல்லி வந்தீர்கள்.. யாரேனும் தெரிந்தவர்கள் சொன்னால் உள்ளே விடுகிறோம் என்றவுடன் மனது மிகவும் சங்கடமாக இருந்தது.
அங்கு அம்பாளுக்கு அபிஷேகம் நடந்து கொண்டு இருந்தது. கண்கொள்ளாக் காட்சி மனதில் இருந்த கணம் குறைந்தது.
அப்பொழுது அம்பாள் சன்னதி முகப்பை சற்று கவனிக்க தோன்றியது.
அங்கு உள்ள நீலக் கலர் போர்டில் எழுதப்பட்டுள்ள வாசகங்கள் எவ்வளவு அபத்தமாக உள்ளது. ஒன்றுக்கொன்று கோர்வையில்லாமலும், அர்த்தம் அனர்த்தமாகவும் உள்ளது. இதை ஏன் யாரும் கவனிக்காமலும் சரி செய்யாமலும் இருக்கிறார்கள் என்று தோன்றியது.
அந்த நாளில் “சுக்கு மிளகு திப்பிலி” என்பதை “சுக்குமி-ளகுதி-ப்பிலி” என்று பிரித்து வேடிக்கையாகக் கூறுவார்கள். அது போல உள்ளதே. இதை பெரியவாளும் ஏன் கவனிக்காமல் இருக்கிறார். ஒன்றும் புரியவில்லை. அதற்குள் அலங்காரம் முடிந்து தீபாராதனை செய்தார்கள்.
அலங்காரம் செய்த பெரியவர் எங்களை அழைத்தார். அம்பாள் சன்னதிக்கு அழைத்துச் சென்று நாங்கள் கொடுத்த புடவையை அம்பாளுக்கு சாத்தி தீபாராதனை செய்து பிரசாதம் கொடுத்தார்.
பிறகு மடத்திற்கு சென்று அங்கு சந்திரமௌலீஸ்வரர் பூஜையை தரிசித்தோம். பூஜை நடந்து கொண்டு இருக்கும் பொழுது, அதை அமைதியாக தரிசிக்காமல் ஒரு நபர் ஏனோதானோ என்று ராகம் தாளம் இல்லாமல் உரத்தக் குரலில் பாடிக்கொண்டு இருந்தார்.
பெரியவர் பூஜை செய்கிறாளே.. நாம் அமைதியாக இருக்க வேண்டும் என்று இல்லாமல் அவரது கவனத்தை தன் பக்கம் ஈர்க்கும் வகையில் அது அமைந்து இருந்தது. “செல்போன் பேசாதீர்கள்” என்று போர்டு போடுவது போல, “இங்கு அமைதி காக்கவும்” என்று போர்டு போடலாமே என்று எனக்குத் தோன்றியது. இதை நிர்வாகம் அல்லவா செய்ய வேண்டும்!
மறுபுறம் ஜெயேந்திரர் தனது அறையில் அமைதியாக பக்தர்களுக்கு பிரசாதம் கொடுத்துக் கொண்டிருந்தார். அங்கு இருவர் நல்ல ராகத்துடன் பாடிக் கொண்டு இருந்தனர். அதை அவர் ரசித்துக் கொண்டும் இருந்தார். இதுபோல தனியாக இருக்கும் சமயத்தில் பாடினால் அதை அவரும் ரசிப்பார் நாமும் ரசிக்க முடியும்.
“பூஜை வேலையில் கரடி பூந்தது போல” என்று ஒரு பழமொழி. அதுபோல பூஜை செய்யும் வேலையில் அவர்களது மௌனத்தை நாம் கலைக்காமல் பூஜையை ரசிப்பது சிறந்தது என்று ஏன் அங்கு கூற மறுக்கிறார்கள்… அது நமக்கேத் தெரிய வேண்டும் என்பதாலா?
பிறகு மஹாபெரியவர் பிருந்தாவனத்தில் மௌனமாக என்னுடைய குறை நிறைகளைக் கூறிக்கொண்டு இருக்கும் சமயம், ஒரு அன்பர், “மஹா பெரியவா நான் சீனு வந்து இருக்கேன். ரொம்ப இடிஞ்சு போய் வந்து இருக்கேன். நீங்கதான் பார்த்து நல்ல வழி காண்பிக்கணும் என்று உரத்த குரலில் கூறிவிட்டு, அங்கிருந்து நகர்ந்து பூஜை நடக்கும் இடத்துக்கு சென்றுவிட்டார். அப்பொழுது அங்கு யாரும் இல்லை.
அட சற்று முன்புதான் நானும் இதுபோல சொன்னேன். அதே மாதிரி இவரும் கூறுகிறாரே என்று மனதில் நினைத்துக்கொண்டு சன்னிதானத்தை பார்த்தேன். அங்கு அருகில் ஒரு நபர் நான்கு வரியில் ஒரு பாடலை பாடினார்.
அதில் “பழம் ஒன்று எந்தனுக்குத் தா” என்ற வாசகம் இருந்தது. உடன் சன்னிதானத்தைப் பார்த்தேன்.
சன்னிதானத்தில் அப்பொழுது ஒரு பழம் கூட இல்லை. உடன் எழுந்து எதிரில் உள்ள கடைக்கு சென்று ஒரு ஆப்பிள் பழம் வாங்கி வந்து அங்கு பூஜை செய்பவரிடம் கொடுத்து இதை பெரியவா சன்னிதியில் சேர்த்துவிடுங்கோ என்றேன்.
கொஞ்ச நேரத்தில் ஒரு 50-60 பேர் அங்கு வந்து தரிசித்து சென்றனர். அவர்களுக்கு தீர்த்தமும் புஷம், வில்வம் இவைகளை அங்கு பூஜை செய்பவர் கொடுத்து வந்தார்.
பிறகு முன்பு கோரிக்கை கொடுத்த சீனு பூஜையை தரிசித்துவிட்டு, மீண்டும் இங்கு வந்தார். அப்பொழுது அங்கு பூஜை செய்பவர் நீங்கதானே சீனு என்று கேட்டார்.
அவரும் ஆமாம் என்று கூறினார். இதற்கு முன்பு நாம் இவரைப் பார்க்கவில்லையே என்று யோசித்தார்.
நான் அவர் சன்னிதானத்தில் வைக்கச் சொன்ன ஆப்பிளை எடுத்து, அவருக்கு பிரசாதமாக கொடுத்தார்.
ஆகா… பெரியவா இருந்த காலத்திலே இதுபோல பல அதிசயங்கள் நம் கண்முன் பார்த்து இருக்கோம். இப்பவும் நம்முடைய குறைகளைக் கேட்டு பிரசாதம் கொடுக்கிறார் என்று நினைக்கும் பொழுது உடம்பு சிலிர்த்து மௌனமானேன்.
அவர் கூறிய சமயத்தில் அங்கு எந்த பழமும் இல்லை, என்று தெரிந்து ஒருவரை பாட்டு மூலமாக வெளிப்படுத்தி நம்மை வாங்கி வரச் சொல்லி அவருக்கு அருளாசி வழங்கி இருக்கிறார் என்றால் இன்னும் அவர் நம்முடன்தான் இருக்கிறார் என்பதற்கு இதைவிட சான்று வேறு ஒன்றும் இல்லை.
பிறகு வீட்டிற்கு வந்துவிட்டேன். அன்று இரவு நல்ல மின்னல் இடி முழக்கம். அதில் ஒரு மின்னலும் இடி முழக்கமும் என் வீட்டின் ஜன்னலை பதம் பார்த்துவிட்டது. அதில் உள்ள கண்ணாடி உடைத்து நொறுங்கிவிட்டது.
மஹாபெரியவா ஏதோ எங்கள் குடும்பத்திற்கு வர இருந்த மின்னல் இடி போல உள்ள தாக்கத்தை எப்படி ஜன்னல் கண்ணாடி மூலம் வாங்கி நிவர்த்தி செய்தார். அதன் அர்த்தம் என்ன என்று எங்களுக்கு புரியாவிட்டாலும் ஏதோ வரவேண்டிய பாதிப்பை தடுத்து நிறுத்தி இருக்கிறார் என்பது மட்டும் உண்மை.
காலையில் பூஜை செய்யும் போது மானசீகமாக அவரை நினைத்துப் பிரார்த்தித்து கண்கலங்கி ஒரு நமஸ்காரம் செய்தேன். எங்கள் மீதும் எங்கள் குடும்பத்தின் மீதும் அவருக்கு எப்பொழுதும் அளவுகடந்த பாசமும், பரிவும் உண்டு என்பதை வார்த்தையால் சொன்னால் முடியாது. அதனால், இதை என் அனுபவ பாடமாக எழுதுகிறேன்.