Divine Astrologer
தேதியூர் V.மஹாதேவன்
98417 89483
சாம்புவாத்து திண்ணை களைகட்டி இருந்தது. ஜமுக்காளம் அருகில் வெத்தலை பெட்டி, தண்ணீர் சொம்பு சகிதம் சீட்டு கச்சேரி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டு இருந்தது. அவாத்தில் இந்த வருடம் தலைதீபாவளி. மாப்பிள்ளை அவா மனுஷா . . . . தடபுடல் சாப்பாடு ஒரு வாரம் முன்பே ஜகஜோதியாக காட்சி அளிக்கிறது.
அம்பி ஐயர் என்ன ஒரு கை கொரையராப் போல இருக்கு என்று பேச்சு கொடுக்க ஆரம் பித்தார். சாம்பு உடனே . . . ஆமா நம்ம ராம சாமி எங்கே ஆளயே காணமே.
எங்கேயாவது வெளியூர் போயிட்டானா என்றார். கிருஷ்ண அய்யர் உடனே அவன் பொண்ணை பார்க்க திருச்சி போயிருக்கான். இன்னிக்கு வரேன்னு சொன்னான். ஆனா இதுவரையிலும் ஆள காணும் என்று கூறிக் கொண்டு இருக்கும் போது சோர்ந்த முகத் துடன் நுழைந்தார் ராமசாமி.
என்ன ராமசாமி ஆத்துலே எல்லோரும் சௌக்கியம் தானே என்று விசாரித்தார் அம்பி அய்யர்.
ம். . . . .ம். . . . ம் சாம்பு . . . . . என்ன ராமசாமி . . . . மூஞ்சியே சரியில்லையே என்ன பிரச்சினை சொல்லு.
ஒண்ணுமில்லை. ஒரே குழப்பம் தான். திருச்சியிலே நம்ம குப்புவோட சொந்தக்காரர் ஜாதகம் ஒன்னு கொடுத்தார். அவர் பெண் ணோடது.
அந்த பெண்ணுக்கு 5 வருஷமா பையன் பார்க்கிறாராம். ஒன்னும் சரியா வரமாட் டேங்குது. அப்படியே வந்தாலும் அங்குள்ள ஜோஸ்யர்கள் ரொம்ப குழப்பி விடுகிறார்கள். பெண் ஜாதகத்திலே சர்ப்ப தோஷம் இருக் குன்னு ஒருத்தர் சொல்கிறார். இன்னுருத்தர் இல்லைங்கிறார்.
இதுனாலேயே தடங்கல் ஏற்பட்டுக் கொண்டு இருக்குன்னு கொடுத்தார். அந்த ஜாதகத்தை கையில வாங்கினதிலிருந்து எனக்கு ஒரே குழப்பமா இருக்கு. அதான் வேற ஒன்னுமில்லை என்று மூச்சு விடாமல் கூறி முடித்தார் ராமசாமி.
சரி விடு ராமசாமி. ஒரு கை போடு. காலம்பர நம்ம ஜோஸ்யர் மாமா பூஜை முடிச்ச உடனே போய் அவரிடம் கேட்டால் எல்லாம் தெளிவாகசொல்லிவிடுவார். கவலையை விடு என்றார் சாம்பு.
அதுக்கு அப்புறம் தான் ராமசாமிக்கு ஒரு புது தெம்பு வந்தது. வாசலில் பெல் சத்தம் கேட்டதும் ஜோஸ்யர் மாமா யாரது. . . . என்று
குரல் கொடுத்தார்.
நான் தான் சாம்பு என்றார்.
வா சாம்பு. எங்கே ரொம்ப நாளா ஆள காணும். தலை தீபாவளி மும்முரமா என்றார்.
ஆமா. அது போகட்டும் ஒரு பக்கம். . . .என்று இழுத்தார். நம்ம ராமசாமிக்கு ஒரு ஜாதகத்த பத்தி தெரிஞ்சுக்கணுமாம். அந்த ஜாதகத்திலே கால சர்ப்ப தோஷம் இருக்கா? இல்லையா? அது தோஷமா? யோகமா? ஏன் கல்யாணம் இன்னும் ஆகலை அப்படின்னு . . . . . . .
இவ்வளவு தானா. . . சரி ஜாதகத்தை கொடு பார்க்கலாம் என்று வாங்கி பார்த்து விட்டு விளக்க ஆரம்பித்தார் ஜோஸ்யர் மாமா.
கால சர்ப்பம் தோஷமா? யோகமா? என்பது காலம் காலமான பிரச்சினை தான்.
கால சர்ப்ப தோஷம் என்பதில் நாம் நன்கு கவனித்தால் இதில் மூன்று பதங்கள் உள்ளன. கால – சர்ப்ப – தோஷ (யோக) என்று. இதில் எந்த காலத்தில் – எந்த சர்ப்பத் தால் – என்ன தோஷம்/யோகம் என்று தீர்மானிப்பது அவ்வளவு சுலபமான விஷயமில்லை.
கிரஹ சேர்க்கையில் கிரஹ அமைப்பால், கிரஹ பார்வையால் யோக அமைப்புகள் சுப-பாப கிரஹங்களாலும் உண்டாகிறது.
இப்போ ஒருவன் கஷ்டத்தை அனுபவித்து சுகத்தை அடஞ்சா தேவலையா? இல்லை சுகத்துடன் கொஞ்சநாள் அனுபவித்து பின் வயதில் கஷ்டத்தை அடஞ்சா தேவலையா? இதில் எது சிறந்தது.
கொஞ்சம் யோசித்து பார் ராமசாமி. இவை இரண்டில் கஷ்டப்பட்டு, கஷ்ட நஷ்டங் களையும், சோதனைகளையும், ஏகப்பட்ட வேதனைகளையும், இளம் வயதில் அனுபவித்து, உற்றார் உறவினர் ஆதரவு இன்றி தன் சுயமுயற்சியில் சுய சம்பாத்தியத்தில் முன்னேறி பின்வயதில் சுக சௌக்கியங் களுடன் வாழ்வது இருக்கே அது ஒரு சுகம் தான் என்றாலும் இளம் வயதில் வரும் வறுமை இருக்கே அது மிகவும் கொடியது.
இந்த துர்பாக்ய அமைப்பு ஜாதகத்தில் உள்ள கிரஹ நிலையால் உருவானது தான். இந்த அமைப்புக்குத்தான் கால சர்ப்ப அமைப்பு என்று பெயர். இது என் சொந்த அனுபவம்.
ராகு-கேதுக்களிடையே மற்ற ஏழு கிரஹங் களும் நின்று விட்டால் அந்த அமைப்பிற்கு கால சர்ப்ப தோஷம்னோ/யோகம்னோ உடனே சொல்லக்கூடாது. இந்த அமைப்பு பல்வேறு கோணங்களில் காணப்படலாம். கால சர்ப்ப அமைப்பு மிகவும் வசதி படைத்த குடும்பங்களிலும், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களிலும் பாரபட்சமின்றி பார்க்கலாம்.
சூரியன் முதல் சனி வரையுள்ள கிரஹங்களோடு ராகு-கேதுவை சேர்த்து நவகிரஹங்களாக செயல்படுது. ராகுவை யோககாரகன் என்றும், கேதுவை மோக்ஷகார கன் என்றும் சொல்கிறோம் இல்லையா.
ஆனா இந்த இரண்டு கிரஹங்களுக்கும் ஆட்சி வீடு என்பது கிடையாது. ராசி மண்டலத்தை கிரஹங்களுக்கு கணக்கிடும் பொழுது சூரியன் – சந்திரன் இவர்களுக்கு ஒரு ஒரு வீடு என்றும் மற்ற கிரஹங்களுக்கு இரண்டு வீடுகள் என்றும் மகான்களும் மகரிஷிகளும் வகுத்துள்ளனர். ஏழு கிரஹங் களின் அடிப்படையில் ஏழு கிழமைகளின் பெயரையும் மிக அழகாக வைத்துள்ளனர்.
நட்சத்திர மண்டலத்தை கிரஹங்களுக்கு கணக்கிடும் பொழுது ஒவ்வொன்றிற்கும் மூன்று நட்சத்திரங்கள் என்ற விகிதத்திலும் கணக்கிட்டு ராகுவிற்கு – திருவாதிரை, சுவாதி, சதயம் என்றும் கேதுவிற்கு – அசுவதி, மகம், மூலம் என்றும் வகுத்துள்ளனர்.
கால சர்ப்ப அமைப்பை பற்றி பார்த் தேள்னா அது பலவகையா சொல்லலாம். ராகுவிடம் இருந்து ஏழு கிரஹங்களும் கேதுவை நோக்கியும், கேதுவிடம் இருந்து மற்ற கிரஹங்கள் ராகுவை நோக்கியும் அமையும். இதில் முதல் வகை அமைப்புதான் சிறந்தது என்பது என் அனுபவம்.
ராகு கேதுக்களிடையே ஆட்சி கிரஹங் களோ உச்ச கிரஹங்களோ, யோக அமைப்பு களோ, கிரஹ சேர்க்கையோ, கிரஹ பார்வையோ இருந்தால் அதனால் உருவாகும் யோகங்கள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை பிரகாசிப்பது இல்லை. இதைத் தான் நான் அடிக்கடி சொல்வதுண்டு.