– வனஜா மஹாதேவன்
உமாதேவியை மகளாகப் பெற்ற தக்கன் சிவபெருமானுக்கு மாமன் ஆனான். அதனால் அவனது அகந்தை தலைக்கு ஏறியது.
“சிவனை நீக்கி ஒரு யாகம் செய்யப் போகிறேன். எல்லோரும் வாருங்கள்” என அனைவருக்கும் அழைப்பு விடுத்தான். பிரம்மாதி தேவர்கள் தங்கள் பத்தினிமார் களுடன் யாகசாலையில் கூடி விட்டனர். யாகம் தொடங்கியது. உமாதேவி அவமானப்பட்டு மீண்டாள். இதைக் கண்ட சிவபெருமானுக்கு கோபம் தலைக்கேறியது. நெற்றிக் கண்ணைத் திறந்தார். வீரபத்ரக் கடவுள் தோன்றினார்.
தக்கனிடம் சென்ற வீரபத்ரன் “தக்கனே! வேள்விக்குத் தலைவராகிய எங்கள் சிவபெரு மானுக்குரிய அவிர்பாகத்தைக் கொடு. ஏன் வீணாக அழிகிறாய்?” எனக் கேட்டும் தக்கன் உடன்படவில்லை.
சிவபெருமானை மேலும் இகழ்ந்தான்.
உக்கிரமூர்த்தியான வீரபத்திரருக்கு சினம் பொங்கியது. யாகத்தையே அழிக்கத் தொடங்கினார். தேவர்கள் ஓட ஆரம்பித்தனர். வீரபத்திரர் சும்மா விடுவாரா?
சந்திரனை காலால் தேய்த்தார். சூரியனின் பல்லை உடைத்தார். அக்னியின் கையை முறித்தார். ‘அவி உண்ட நாக்கினைக் காட்டு’ எனக் கூறி அவனது ஏழு நாக்குகளையும் அறுத்து எறிந்தார். இமயனைப் பிடித்து அவன் தலையை அறுத்தார். குயில் வடிவம் எடுத்து ஓடிய இந்திரனைப் பிடித்து அவனது சிறகுகளை சின்னாபின்னாமாக்கினார். அஞ்சி ஓடிய நிருதியைப் பார்த்து ‘நில்’ எனச் சொல்லி தண்டினால் அடி கொடுத்தார். மழுவினால் வாயு தேவனை அடித்தார். முத்தலை சூலத்தால் குபேரனை மோதி தண்டித்தார். இப்படி பலரையும் தண்டித்து வீரபத்ரர் யாகத்தைச் சிதைத்துக் கொண்டிருந்த போது பிரம்ம தேவன் தனது மனைவி சரஸ்வதியுடன் அகப்பட்டுக் கொண்டான். யாராக இருந்தால் என்ன? பிரம்மனைப் பிடித்து இழுத்து தலையில் இடி விழுந்தது போல் சீங்கிக் குட்டினார். அவ்வளவு தான். தலை குனிந்து வணங்குபவனைப் போல் பூமியில் விழுந்தான் பிரம்மன்.
அருகே நின்ற சரஸ்வதியின் மூக்கினை அறுத்து அவளை அவமானப்படுத்தினார்.
வாளினால் தக்கன் தலையை அறுத்தார். அது கீழே விழாதபடி தாங்கி அக்னியில் இட்டார். அருகே இருந்த ஆட்டின் தலையை எடுத்து தக்கன் உடலில் பொருத்தினார்.
மூக்கறுபட்ட சரஸ்வதி தன் நிலையைக் கண்டு வேதனைப்பட்டாள். கணவரிடம் கூறிப் புலம்பினாள்.
‘தவத்தால் எதையும் அடையலாம்’ என்று பிரம்மா கூற சரஸ்வதி பெருஞ்சேரிக்கு வந்தாள். இங்கு கோயில் கொண்டிருக்கும் வாகீஸ்வரசுவாமியை நோக்கி தவமிருக்கத் தொடங்கினாள். பல ஆண்டுகள் தவமிருந்தாள்.
சிவபெருமான் சரஸ்வதி முன் தோன்றினார்.
‘என்ன வேண்டும் கேள்?’ என்றார் சிவ பெருமான்.
“எனது அங்க குறைபாடு நீங்க வேண்டும். எல்லோருடைய நாவிலும் வீற்றிருந்து வாக்கு விருத்தியளிக்கும் பேற்றை எனக்குத் தந்தருள வேண்டும்” என்று சரஸ்வதி தேவி வேண்ட ‘அப்படியே ஆகட்டும்’ என இறைவன் அருள் புரிந்தார்.
சரஸ்வதி இழந்த மூக்கை மீண்டும் பெற்றாள். கணவரான பிரம்மதேவரைச் சேர்ந்தாள். வாக்கு வன்மையளிக்கும் பேற்றையும் பெற்றாள்.
இப்படி கல்விக்கு அரசியான சரஸ்வதி தேவிக்கு அருள் புரிந்த வாகீஸ்வரசுவாமி ஆலயம் நாகை மாவட்டத்தில் மயிலாடு துறையில் இருந்து 9 கி.மீ. தொலைவில் பெருஞ்சேரியில் அமைந்து உள்ளது.
ஆலயம் கீழக்குதிசை நோக்கி அமைந்துள் ளது. இங்கு அருள்பாலிக்கும் இறைவன் வாகீஸ்வரசுவாமி, இறைவி கவாதந்தர நாயகி.
முகப்பைக் கடந்ததும் அகன்ற பிரகாரம், கொடிமரம், நந்தி, பலிபீடம். இவற்றைக் கடந்ததும் மூன்று நிலை ராஜகோபுரம். அதை அடுத்து சிறப்பு மண்டபம். மண்டபத்தின் வலதுபுறம் இறைவியின் சன்னதி. அடுத்துள்ள மகாமண்டபத்தை அடுத்து அர்த்த மண்டப மும், அதையடுத்து கருவறையும் உள்ளன.
கருவறையில் இறைவன் வாகீஸ்வர சுவாமி லிங்கத் திருமேனியில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இங்கு ஆவுடையார் சதுரவடிவில் அமைந்திருப்பதும், இறைவனின் விமானம் இந்திர விமானமாய் வட்ட வடிவில் அமைந்திருப்பதும் இங்கு சிறப்பாகும்.
உட்பிராகாரத்தில் சரஸ்வதி தேவி சிவபெரு மானை பூஜை செய்யும் சிற்பம் மிக அற்புத மாக அமைந்துள்ளது. தேவ கோட்டத்தின் தென் திசையில் விநாயகர், சரஸ்வதி, தட்சிணாமூர்த்தியும், மேற்கில் அண்ணாமலை யாரும், வடக்கில் பிரம்மாவும், துர்க்கையும் அருள்பாலிக்கின்றனர்.
பிராகாரத்தின் மேற்கில் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை, கஜலட்சுமியும், வடக்கில் சண்டிகேசுவரர் சன்னதியும் உள்ளன. வடகிழக்கு மூலையில் நவகிரக நாயகர்கள் அருள்பாலிக்கின்றனர். கிழக்கு பிராகாரத்தில் நான்கு பைரவர் உள்ளன.
எண்ணூறு ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் கட்டப்பட்டதாக சொல்கின்றனர்.
ஆலயத்தின் தலவிருட்சம் பன்னீர் மரம். இது ஒரு குரு பரிகார தலமும் கூட. வியாழன் தேவகுருவாக பதவி ஏற்ற தலமும் இதுதான்.
வியாழன் ஒரு பெரிய ஞானி. முக்காலத்தை யும் உணரும் சக்தி உடையவர். வேத ஆகமங்களைக் கற்றவர். அவருடைய மனைவி தாரை பேரழகி. பார்ப்பவர்களை சுண்டி இழுக்கும் அழகு படைத்தவள்.
வியாழனின் குருகுலத்தில் தங்கி ஒரு மாணவ னாக இருந்து கொண்டு குருகுலவாசம் செய்து கொண்டிருந்த மாணவர்களில் சந்திரனும் ஒருவன்.
தாரையின் கண்களும், சந்திரனின் கண் களும் சங்கமித்தன. வந்தது வினை. இருவரும் தங்களது நிலையை மறந்து காம வசப்பட்டனர். முக்காலத்தையும் உணர்ந்த வியாழன் இச்செயலையும் உணர்ந்தார். சந்திரனுக்கு குஷ்டரோகம் உண்டாகும்படி சபித்தார். எனினும் அவரது மனக்கலக்கம் நீங்கவிலை. தலயாத்திரை புறப்பட்டார். பெருஞ்சேரி வந்ததும் மனம் சற்றே நிம்மதி அடைந்தது போல தோன்றியது. ஆனால் முழு நிம்மதி கிடைக்கவில்லை.
சிவபெருமானை நோக்கி இங்கு தவமிருக்கத் தொடங்கினார். பஞ்சாக்கினி மத்தியில் நின்று தவம் செய்யத் தொடங்கி னார். பன்னிரண்டு ஆண்டுகள் ஓடின.
இறைவன் மனமிரங்கி அவர் முன் தோன்றினார். அவருக்கு மனச்சாந்தி ஏற்பட்டது.
பிறகு பிரகஸ்பதியாகிய வியாழன் விருப்பப் படி சந்திரனின் குஷ்டம் நீங்கியது. தாரை இறைவனை வணங்கி தூய்மை பெற்றாள். வியாழன் மாயூரம் தட்சிணா மூர்த்தியை வழிபட்டு தான் தேவகுரு ஆக வேண்டும் என்று முன்பே வேண்டியிருந்தார். இறைவன் பெருஞ்சேரி சென்று சிவலிங்கத்தை பூஜை செய்யுமாறு பணிந்தார்.
வியாழனும் பெருஞ்சேரியில் சிவபெரு மானை பூஜித்ததாலும், தவம் இருந்து மெய்ஞானம் பெற்றதாலும் சிவபெருமான் தேவர்களுக்கெல்லாம் குருவாக தேவகுரு வாக அவரை இத்தலத்தில் நியமித்தார்.
எனவே, இத்தலத்து இறைவன் ‘வாக்கு நல்கிய வள்ளல்’ என்ற பெயரிலும் இத்தலத்தில் அழைக்கப்படுகிறார்.
வியாழன் பிரார்த்தனை செய்து இத் தலத்து இறைவனை வணங்கி நினைத்தபடி தேவகுரு ஆனது போல், தன்னை வணங்கும் பக்தர்களின் கோரிக்கைகளையும் நிறைவேற் றும் வள்ளலாகவே இத்தலத்து இறைவன் திகழ்கிறார் என்பதில் சந்தேகமேயில்லை.
இங்கு வந்து வழிபடுபவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறுவதாகவும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அந்த பாக்யத்தை அடைவதாகவும் உடலில் ரோகம் உள்ளவர்கள் வியாழன் அன்று விரதமிருந்து இங்கு வந்து வேண்டுதலை நிறைவேற்றுவதாகவும் கூறுகின்றனர்.