swarnapuriswarar temple

உற்சவர் :
அம்மன்/தாயார் : சொர்ணாம்பிகை, சிவசேகரி
தல விருட்சம் : வன்னி
தீர்த்தம் : திரிசூலகங்கை
ஆகமம்/பூஜை :
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருக்கடுவாய்க்கரை தென்புத்தூர்
ஊர் : ஆண்டான்கோவில்
மாவட்டம் : திருவாரூர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள் :அப்பர்

 

 தேவாரப்பதிகம்

குண்டு பட்ட குற்றம் தவிர்த்தென்னை யாட்கொண்டு நாற்றிறங் காட்டிய கூத்தனைக்
கண்டனைக் கடுவாய்க் கரைத் தென்புத்தூர்
அண்டனைக் கண் டருவினை யற்றெனே.

-திருநாவுக்கரசர் தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 97வது தலம்.

திருவிழா: மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம்.

தல சிறப்பு: ஆண்டு தோறும் சித்திரை 11,12,23 தேதிகளில் சூரிய ஒளி மூலஸ்தானத்தில் விழுந்து சூரிய பூஜை நடக்கிறது. இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

திறக்கும் நேரம்: காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி: அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், ஆண்டான்கோவில்- 612 804. திருக்கடுவாய்க்கரைப்புத்தூர், வலங்கைமான் தாலுக்கா, திருவாரூர் மாவட்டம்

போன்: +91- 4374-265 130.

பொது தகவல்: இத்தல விநாயகர் கும்பகர்ண விநாயகர் என்ற திருநாமத்தில் அருள்பாலிக்கிறார்.

பிரார்த்தனை : குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இத்தல இறைவனை வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும்.

நேர்த்திக்கடன்: சரியான வயதில் வயதுக்கு வராத பெண் குழந்தைகள் திங்கள் கிழமையில் இத்தலத்தில் நீராடி, இறைவனுக்கு விளக்கேற்றி அர்ச்சித்தால் விரைவில் “ருது’ ஆகிவிடுவார்கள் என்பது நம்பிக்கை.

தலபெருமை: காசிப முனிவர் வழிபாடு செய்துள்ளார்.

தல வரலாறு: முசுகுந்த சக்கரவர்த்தி திருவாரூரில் தியாகராஜர் கோயில் கட்டிக்கொண்டிருந்த காலம் அது. கண்டதேவர் என்ற மந்திரி திருவாரூர் கோயில் கட்டுவதற்காக மலையடிவாரத்திலிருந்து கல் கொண்டு வர சென்றார். இருட்டி விட்டது. இவர் சிவதரிசனம் செய்யாமல் எப்போதும் உணவருந்த மாட்டார். எனவே சாலையோரமாக படுத்துவிட்டார்.

சிவன் இவரது கனவில் தோன்றி, “”நான் அருகே உள்ள வன்னிமரத்தின் அடியில் உள்ளேன். என்னை தரிசித்து விட்டு உணவருந்து,”என்று கூறிவிட்டு மறைந்து விடுகிறார்.

மந்திரி வந்து பார்த்த போது சிவன் கூறியபடியே வன்னிமரத்தடியில் ஒரு லிங்கம் இருந்தது. உடனே அவர் திருவாரூர் கொண்டு செல்லும் ஒவ்வொரு வண்டியிலிருந்து ஒரு கல்லும், ஒவ்வொரு சுண்ணாம்பு மூட்டையிலிருந்து ஒரு கரண்டி சுண்ணாம்பும் கொண்டு வந்து இந்த இடத்தில் கோயில் கட்டி முடித்து கும்பாபிஷேகமும் நடத்தி விட்டார்.

ஒரு முறை முசுகுந்த சக்கரவர்த்தியிடம் நடந்த விஷயங்கள் எல்லாம் கூறி, இந்த கோயிலை வந்து பார்க்கும்படி வேண்டினார்.

மன்னன் வந்து கோயிலை பார்த்து விட்டு,””மந்திரியாரே! இந்த கோயில் கட்டுவதற்கு உண்டான செலவையும், அதற்கான தர்மத்தையும் என்னிடம் கொடுத்துவிடு,”என்றார். அதற்கு மந்திரி, “”மன்னா!என் உயிரைக்கொடுப்பேனே தவிர இந்த தர்மத்தை கொடுக்க மாட்டேன்,”என்றார். இதனால் கோபமடைந்த ராஜா,””என் சொத்தில் தானே இந்தகோயிலை கட்டினாய். எனவே திருடிய குற்றத்திற்காக இந்த கோயில் சன்னதி முன்பு இவனது தலையை வெட்டுங்கள்,” என உத்தரவிட்டார். மன்னனின் உத்தரவுப்படி தலை வெட்டப்பட்டது.

வெட்டிய தலை பூமியில் விழுந்தவுடன் “ஆண்டவனே’ என்றது. இதையறிந்த ராஜா ஒரு உண்மையான சிவபக்தனை வெட்டிவிட்டோமே என வருந்தி, தன்னையும் வெட்ட நினைக்கிறார்.

அப்போது இறைவன் தோன்றி “”ராஜாவும், மந்திரியும் கணவன் மனைவி மாதிரி இருக்க வேண்டும்” என்று கூறி மந்திரிக்கு உயிர் கொடுத்து இருவரையும் ஆசிர்வதிக்கிறார். அன்று முதல் இத்தலம் “ஆண்டவன் கோயில்’ எனப்பட்டது.

சிறப்பம்சம்

அதிசயத்தின் அடிப்படையில்: ஆண்டு தோறும் சித்திரை 11,12,23 தேதிகளில் சூரிய ஒளி மூலஸ்தானத்தில் விழுந்து சூரிய பூஜை நடக்கிறது. இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்