வனஜா மகாதேவன்
சோழநாட்டின் சிறப்புடைய ஒரு பகுதியாய் பொன்னி நதியும், காவிரி பாயும் தென் தமிழ்நாட்டின் நடுநாயகமாய் வீற்றிருக்கும் திருச்சி மாவட்டத்தின் வடகரையில் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 25 கி.மீ. தொலைவில் சிறுகனூருக்கு மேற்கில் 5 கி.மீ. தொலைவில் திருப்பட்டூர் அமைந் துள்ளது. இவ்வூரில் பழமையும் பெருமை யும் மிக்க ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது.
இவ்வாலயம் ஐந்து (5) நிலைகள் கொண்ட இராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி கம்பீரமாக காட்சியளிக்கிறது. நாம் உள்ளே நுழைந்ததும் கொடிமரம். அதனைத் தொடர்ந்து நந்தியெம்பெருமான் ருத்ராட்ச பந்தலின் கீழ் காட்சியளிக்கிறார். இம் மண்டபத்திற்கு பெயர் வேத மண்டபம். அதனைத் தொடர்ந்து உள் பிரகாரம் சென்றால் நாத மண்டபம். இம்மண்டபத்தில் சப்தஸ்வரத்தூண்கள் அமையப்பெற்றுள்ளது. இம்மண்டபத்தினைக் கடந்து உள்ளே சென்றால் துவார பாலகர்களை வணங்கி ஈசன் கருணைக் கடலான பிரம்மனுக்கு அருள் புரிந்த பிரம்மபுரீஸ்வரரைக் காணலாம்.
ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர்க்கு கிழக்கு நோக்கிய சன்னதி. சுயம்பு மூர்த்தி. அழகிய தோற்றம். மேலே தாரா பாத்திரம். நாகாபரணத்துடன் கூடிய சதுர ஆவுடையார் கூடிய திருமேனி. ஈசன் ஸ்ரீ பிரம்மனின் தலையெழுத்தை மாற்றி அருள்புரிந்ததால் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆனார்.
நாத மண்டபத்தின் தென்புறம் சென்றால் மிகப் பெரிய கிழக்கு நோக்கிய ஸ்ரீ பிரம்மா சன்னதி. பிரம் மனுக்கு கோவில்கள் இல்லை என்பது பொதுவான கருத்து. ஆனால் பிரம்மன் இல்லாத சிவ ஆலயம் இல்லை என்பது தான் உண்மை. எல்லா சிவ ஆலயத் திலும், ஈசனின் இடபுறத்தில் அபிஷேக தீர்த்தம் வரும் வழியில் கோஷ்டமூர்த்தியாக இருந்து வருகிறார்.
ஆனால் திருபட்டூரில் மட்டுமே மிகப் பிரமாண்ட மான அதுவும் தலையெழுத்தை மங்களகரமாக மாற்றும் சக்தியுடன் தனி சன்னதியுடன் காட்சியளிக்கிறார். பிரம்மன் ஒரு முறை இந்த உலகத்தை படைக்கும் சக்தி தன்னிடம் உள்ளது. மிகுந்த தேஜஸ் உள்ளது. மேலும் ஈசனுக்கும் ஐந்து தலை. தனக்கும் ஐந்து தலை என நான் எனும் அகங்காரத்துடன் ஈசனை மதிக்காதப் போக்கு தென்பட்டது.
ஈசன் பிரம்மனுடைய அகங்காரத்தை அழித்து அவரின் நிலையை உணர வைக்க எண்ணினார். ஆகவே பிரம்மனே ஐந்து தலை என்பதால் அஞ்சுதல் இல்லாமல் இருக்கிறாய் என்று அவருடைய ஒரு தலையை கொய்துவிட்டு, “தேஜஸ் இழக்கக்கடவாய்” என்று சாபம் இட்டார். பிரம்மன் தேஜஸ் இழந்ததால் படைப்பாற்றலையும் இழந்தார்.
தன் நிலையை உணர்ந்த பிரம்மன் திருப்பட்டூரில் துவாதச (12) சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தார். ஆக பிரம்மனின் வழிபாட்டில் மகிழ்ந்த ஈசன் பிரம்மனின் படைப்பாற்றலையும், திரும்ப வழங்கி கூடுதலாக ஒரு வரம் வழங்கினார். பிரம்மனே உன்னுடைய வழிபாட்டில் மகிழ்ந்த யாம் எல்லோருடைய தலையெழுத்தை நிர்ணயிக்கும் உன்னுடைய தலையெழுத்தை மாற்றியது போல் இங்கு வந்து உன்னை வழிபாடு செய்பவர்களுக்கு மீண்டும் ஒரு முறை அவர்களுடைய தலையெழுத்தை மங்களகரமாக மாற்றுவாயாக என்று வரமளித்தார். “விதியிருப்பின் விதி கூட்டி அருள்க” என்றும் வரம் வழங்கினார்.
இந்த வரத்திற்கு இரு பொருள் உண்டு 1)”விதியிருப்பின்” அதாவது இத்தலத்தில் வந்து யாருக்கெல்லாம் தலைவிதி மங்களகரமாக மாற வேண்டும் என்ற விதி உள்ளதோ அவர்களே உன்னை வந்து பார்த்து மாற்றிக் கொள்ள இயலும்.
2)“விதியிருப்பின் விதி கூட்டி அருள்க” யாருடைய தலையெழுத்தையெல்லாம் விதி கூட்டி மங்களகரமாக அருள முடியுமோ அவர் களுக்கெல்லாம் அருள்க என்பதாகும்.
குருவுக்கு அதிதேவதையாக விளங்கும் பிரம்மனின் அருட்பார்வை பட்டாலே போதும். சகல தோஷங்களும் நீங்கி வாழ்வில் அனைத்து நலன்களும் பெற முடியும்.
பதஞ்சலி முனிவர் பிரம்மன் சன்னதிக்கு தென்புறம் உள்ளார். இவர் யோக சூத்திரம் அருளிய பதஞ்சலியாவார். இவர் நித்ய கைங்கர்யாள் என்று அழைக்கப்படுபவர். தினமும் இவர் இத்தலத்து ஈசனை வணங்கி இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு யோகமாகிய ஞானத்தை வழங்கி மன நிம்மதி அளித்து அருள்புரிந்து வருகிறார்.
சப்த மாதாக்கள் பதஞ்சலி முனிவர் சன்னதியின் அருகில் உள்ளது. தட்சிணா மூர்த்தி பிரம்மன் சன்னதிக்கு அருகில் வடபுறம் உள்ளது. மகாவிஷ்ணு ஈசனின் நேர் மேற்கில் கோஷ்டத்தில் உள்ளது.
முருகன் வள்ளி, தெய்வானை ஸ்ரீ பிரம்மன் சன்னதியின் பின்புறம் சற்று தள்ளி உள்ளது. முருகன் வள்ளி தெய்வானையுடன் கூடிய தனித்துவமான சன்னதி. முருகன் இடபாக மயிலில் வாகன மூர்த்தியாக உள்ளார்.
சுதை சிற்பத்துடன் ஒரு கஜலட்சுமியும், கல்சிலா ரூபமாக ஒன்றும் உள்ளது. விஷ்ணு துர்க்கை, சண்டிகேஸ்வரர் சன்னதிக்கு அருகில் உள்ளது. இந்த சன்னதி கொடிமரத்தின் வடபுறம் ஸ்ரீ பிரம்மசம்பத் கௌரி தனிக்கோவிலாக அமைந்துள்ளது. ஸ்ரீ பிரம்ம தேவன் வழிபட்ட அம்பிகை, பிரம்மனுடைய சம்பத்தாகிய தேஜசை அம்பிகை திரும்ப வழங்கியதால் பிரம்மசம்பத் கௌரி என்று வழங்கப்படுகிறது.
ஸ்தல விருட்சம் மகிழமரம். இது அம்மன் சன்னதியின் வடபுறம் உள்ளது. சுமார் 150 ஆண்டுகள் பழமையான மரம். இத்தலத்தில் வாழ்ந்த சித்தர்கள் தாங்கள் விரும்பிய வண்ணம் தங்கள் உடம்பை இம்மண்ணுல கத்தில் கிடத்திவிட்டு இங்குள்ள பச்சை மரங்களில் புகுந்து விடுவார்கள். சமயம் பார்த்து தகுதியான மனித உடம்பிற்குள் பிரவேசிப்பார்கள். இவர்கள் விருப்பம் போல் எங்கும் வாழ்வர்கள். இவர்கள் நட்டு வைத்த மரங்களே தல விருட்சமாக உள்ளது. சித்தர்கள் வாழ்ந்த இடத்தில் பாதாலேசுவரர் இருப்பார். இக்கோயிலில் இவருக்கு தனி சன்னதி விமானத்துடன் உள்ளது.
1) பிரம்ம தீர்த்தம். 2) பகுள தீர்த்தம் 3) சண்முக நதி ஸ்தல தீர்த்தங்களாக உள்ளது.
பிரம்ம தீர்த்தம் அம்மன் ஆலயத்தின் வடபுறம் உள்லது. நான்கு படித்துறைகள் கொண்ட அற்புத தீர்த்தம். இத்தீர்த்தத்தால் பிரம்மனை துவாதாச (12) அபிஷேகித்து வழிபாடு செய்ததால் பிரம்ம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.
பகுள தீர்த்தம் இது ஆலயத்தின் வெளியே வடகிழக்கு மூலையில் சுமார் 150 மீட்டர் தொலைவில் உள்ளது. சண்முக நதி ஆலயத்தின் கிழக்கு பகுதியில் சுமார் 500 மீட்டர் தொலைவில் வடக்கிலிருந்து தெற்காக பாய்கிறது. கங்கைக்குச் சமமான நதியாகும்.
ஏனெனில் கங்கை மட்டுமே வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரும் நதியாகும்.
நம் ஒவ்வொருவருடைய ஆசையுமே நாம் தற்பொழுது இருக்கும் நிலையை விட மிகச் சிறப்பாகவும், நல்ல ஆரோக்கியம், செல்வ நலத்துடன் வாழ வேண்டும் என்பதே. அதற்கு இத்தலத்து ஸ்ரீ பிரம்மாவை நேராக வந்து பார்த்தாலே போதும். நலம் பல வழங்கி நல்வாழ்வு நல்குவார்.
திங்கள், வியாழன், திருவாதிரை, புனர்பூசம், சதயம் மற்றும் நம்முடைய பிறந்த நட்சத் திரத்தன்று இவ்வாலயத்திற்கு வந்து வழிபாடு செய்தல் சிறப்பு.
தலையெழுத்தையே மாற்றுவார் என்பதால் சகலவிதமான சர்வ தோஷ பரிகாரத்தலமாக விளங்குகிறது.
முதலில் இத்தலத்துக்கு வருகை தருதல் வேண்டும். பின்னர் ஈசன், பிரம்மன், அம்மாள் ஆகியோரை தரிசித்து விட்டு, (36) தீபமிட்டு 9 முறை வலம் வந்து வேண்டுதல் வேண்டும்.
கணவன் – மனைவி பிரிந்தவர், கூடுதல், துர்மரணம், வியாபாரத்தில் நஷ்டம், திருமணத் தடை, பிள்ளைகள் இழப்பு கல்வியில் பாதிப்பு, வறுமை, குழந்தையின்மை, மன வியாதிகள் தினமும் நித்ய கண்டம் பூரண ஆயுள், என்ற நிலையில் உள்ளவர்கள் இத்தலத்து ஸ்ரீ பிரம்மாவை நேராக நின்று தரிசித்தாலே போதும். சகல தோஷங்களும் நீங்கி திருப்பட்டூர் “வந்தோம் திருப்பம் நிகழ்ந்தது” என்ற நல்ல மங்களகரமான நிலையை நீங்களும் அடையலாம் வாருங்கள்.