சாம்பு எப்பொழுதும் போல எழுந்து காபி குடித்து விட்டு வாக்கிங் செல்ல தயாரானார். அன்னிக்குன்னு பார்த்து வெத்தலை பெட்டியில் எல்லாம் காலியாக இருந்தது. உடனே கோபம் தலைக்கு மேல் ஏறி ஏண்டி பார்வதி வெத்தலை சீவல் வாங்கலையா என்று குரல் கொடுத்தார்.
மாமி சமாளித்துக் கொண்டு “கோபப்படா தீங்கோ. நேத்திக்கு சிவராத்திரிக்கு கோவிலுக்கு போயிட்டு வரும்போது வாங்கலாம்னு நினைச்சேன் மறந்து போயிடுத்து.”
சரி சரி விடு. . . . என்று சொல்லிவிட்டு கிளம்பி னார். வரும் வழியில் அம்பி ஐயர் வெத்தலையை குதப்பிக் கொண்டு வருவதை பார்த்ததும் இவருக்கு இன்னும் கோபம் அதிகமாயிடுத்து.
என்ன சாம்பு ஒரு மாதிரியா இருக்கே. . . . என்று கேட்டதும் அது ஒன்னுமில்லை என்று சமாளித்ததும் சரி சரி சில நேரம் இப்படித் தான் ஆயிடுது. அதுக்காக. . . . இந்தா வெத்தலைய போடு. எல்லாம் சரியாயிடும் என்று தன் பெட்டியை நீட்டினார்.
பிறகுதான் ஒரு நிதானத்திற்கு வந்து . . . . ஆமா. . . . நம்ம ராமசாமி எங்கே ஆளையே காணோம். நேத்திக்கு சீட்டாடரபோது தான் அவன் ஞாபகம் வந்தது. அதான் உன்னை கேட்டேன் என்று இழுத்தார்.
அவன் கும்பகோணம் போயிட்டு வரேன்னு என்னுட்ட சொல்லி ஒரு வாரம் ஆச்சு. இன்னும் வரலை என்ன ஆச்சு அவனுக்கு என்று சொல்லிக் கொண்டு இருக்கும்போது ஒரு பெரிய பையோட வந்துண்டு இருந்தார் ராமசாமி.
என்ன ராமசாமி இப்பதான் உன்னபத்தி கேட்டுண்டு இருந்தோம். அது என்ன பை ரொம்ப வெயிட்டா இருக்காப் போல தோணுது என்ற உடன் உங்க ரெண்டு பேருக்கும் தான் கும்பகோணம் வெத்தலை சீவல் வாங்கிண்டு வந்தேன் என்ற உடன் சாம்புவுக்கு ஒரே சந்தோஷம். ஆமா போன காரியம் என்ன ஆச்சு என்றார் சாம்பு.
அத ஏன் கேட்கரேள். இந்த பிச்சுமணி தன் பெண் கல்யாணத்துக்கு கொஞ்சம் என்னுட்ட கடன் வாங்கி இருந்தான். அத வாங்கலாம்னு போனா அவன் இதோ அதோன்னு சாக்கு போக்கு சொல்லி இழுத்து அடிச்சுண்டு இருக்கான். இந்த வாட்டி அவன் ஜாதகத்த வாங்கிண்டு வந்துட்டேன். நம்ம ஜோஸ்யர் மாமாக்கிட்ட கேட்டா இவ னிடம் கொடுத்த பணம் எப்ப வரும்னு கேட்கலாம்னு. அதான் . . . சரி விடு. அவர் வேற இப்போ விசேஷமா நித்தியம் நவா வர்ண பூஜை, ஸஹஸ்ரநாமம் பண்ணிண்டு இருக்கார். பூஜை முடிய நேரம் ஆகும்.
சாப்பிட்ட பிறகு போயிடுவோம். அப்ப தான் சரியா இருக்கும் என்றார் சாம்பு.
11 மணி வாக்கில் அவாத்து வாசலில் பெல் சத்தம் கேட்டதும் யாரது என்று குரல் கொடுத்தார் ஜோஸ்யர் மாமா.
நான் தான் சாம்பு. . . . என்ற உடன் கதவை திறந்தார். அவரை பார்த்ததும் எல்லோரும் நமஸ்காரம் செய்தனர். அப் பொழுது தான் பூஜை முடித்து வெளியில் வந்தார். எல்லோருக்கும் பிரஸாதம் கொடுத்து விட்டு என்ன சாம்பு ஒரு நாளைக்கு பூஜைக்கு வரக் கூடாதா என்று கூறிவிட்டு என்ன விஷயம் என்று ஆரம்பித்தார்.
நம்ம ராமசாமி ஒரு ஜாதக விஷயமா பாத்துட்டு போகலாம்னு என்று இழுத்தார்.
சரி. . . . பூஜை முடிஞ்ச உடன் வந்து இருக்கேள். கொடு பார்க்கலாம் என்ற உடன் ராமசாமி விஷயத்தை சொன்னார். அப்படியா சரி சரி . . . . என்று கூறிவிட்டு அவர் விஷயத்தை கூற ஆரம்பித்தார். ராமசாமி
“கல்யாணம் பண்ணிப்பார். வீட்டை கட்டிப்பார்” என்று ஒரு பழமொழி உண்டு. பிச்சுமணி நல்லவர் தான். ஆனா கால சக்கரம் யாரை விட்டு வைக்குது. பிச்சுமணி பெண் கல்யாணத்திலே உள்ள பிரச்சனைகளை அவனிடம் சொன்னபோது அவனுக்கு கோபம் வந்தது. நீயும் தான் இருந்தயே. ஆனா இப்போ அவன் படற கஷ்டத்துக்கு அளவில்லாமல் நடப்பொணமா இருக்கான். ரொம்ப பிரஷர் பண்ணாத. சீக்கிரமா திரும்பி வர நானும் அம்பாளிடம் பிரார்த்திக்கிறேன் என்று கூறி விட்டு மாங்கல்யம் தந்துனானேனா என்ற மந்திர ஸ்லோகம் சொல்லி மனைவி கழுத்தில் கணவன் மாங்கல்யம் அணிவிக்கும் வரை எத்தனையோ பிரச்சினைகள். அவற்றில் ஒன்று ஆண் – பெண் இருவருக்கும் ஜோதிட சாஸ்திரப்படி ஜாதகப் பொருத்தம் பார்ப்பதும் கடன் படுத்தும் பாடும் தான். ஜாதகம் பார்க்கும்பொழுது பல விஷயங்களை மனதில் கொண்டு கவனமாக பார்க்கவேண்டும். இல்லை யெனில் அதனால் வரும் விளைவுகளைப் பற்றி சொல்கிறேன் கேட்டுக்கோ ராமசாமி.
கால புருஷனின் யோநிஸ்தானமான விருச்சிகம், அதன் அதிபதி செவ்வாய். இந்த செவ்வாய் ஜாதகத்தில் யோநிஸ்தானமான 8மிடத்தில் அமர்வது நன்றல்ல. மற்றும் சுக்கிர னுக்கு 8ல் செவ்வாய் அமர்வதும் நல்லதல்ல. மனைவியோ – கணவனோ தீ விபத்தில் சிக்க நேரும். செவ்வாய் எங்கு இருக்கின்றாரோ அந்த இடத்திலிருந்து 10 ம் இடத்தை கெடுப்பார். லக்னத்திற்கு 8 ல் இருக்கிறார் எனில் 5 ம் இடத் தின் வலிமை குறையும். அதாவது புத்திர ஸ்தானம் ஒரு வகையில் பாதிக்கப்படுகின்றது.
ஒரு ஜாதகர் – மேஷ லக்னம், பரணி நட்சத் திரம் அமைந்து சுக்கிரன் நீசமானால், மனைவி – கணவர் உயிருக்கு ஆபத்து வரக்கூடும்.
பொதுவாக மேஷம் லக்னமாகி – பரணி -பூரம் – பூராடம் ஒன்று ஜன்ம நட்சத்திர மாகி ஜாதகத்தில் சுக்ரன் நீசமானால் தம்பதியர் ஆயுளுக்கு பங்கம் ஏற்படும்னு இருக்கு.
அடுத்து ரிஷப லக்னம். இதன் 7ம் அதிபதி செவ்வாய். செவ்வாய்க்குரிய நட்சத்திரங்கள் – மிருகசீரிஷம். சித்திரை, அவிட்டம். ரிஷப லக்னமாகி செவ்வாய் நட்சத்திரம் ஒன்றை ஜன்ம நட்சத்திரமாகப் பெற்று – செவ்வாய் நீசமாதல் தவறு.
மிதுனலக்னம். இதன் 7ம் அதிபதி குரு. அவருக்கு உரிய நட்சத்திரமான புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரம். அதில் ஒன்று ஜன்ம நட்சத்திரமாகி குரு நீசமாவது நல்லதல்ல.
கடக லக்னம், இதன் 7ம் அதிபதி சனியின் நட்சத்திரங்களான பூசம், அனுஷம், உத்தி ராட்டாதி போன்ற நட்சத்திரத்தில் பிறந்து சனி நீசமாகி அமைவது கெடுதல் விளைவிக்கும்.
சிம்ம லக்னத்துக்கும் 7ம் அதிபதி சனியின் நட்சத்திரங்களான பூசம், அனுஷம், உத்தி ரட்டாதி போன்ற நட்சத்திரத்தில் பிறந்து சனி நீசமாகி அமைவதும் சரியில்லை.
கன்னி லக்னம். இதன் 7ம் அதிபதி குரு பகவான். இவர் தம் நட்சத்திரங்கள் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி. கன்னி லக்னம் மேற்படி நட்சத்திரம் ஒன்றை ஜன்ம நட்சத்திரமாகப் பெற்று, குரு ஜாதகத்தில் நீசமாயிருப்பது ஒரு போதும் சுகத்தை கொடுக்க மாட்டார்.
துலாம் லக்னம், இதன் 7ம் அதிபதியான செவ்வாயின் நட்சத்திரம் ஒன்றை ஜென்ம நட்சத்திரமாகப் பெற்றிருந்து செவ்வாய் கடகத்தில் நீசம் பெற்றிருந்தால் சுகம் குறையும்.
விருச்சிகம் லக்னம். இதன் 7ம் அதிபதி சுக்கிரன், பரணி, பூரம், பூராடம் ஜென்ம நட்சத்திரமாகி சுக்கிரன் நீசமாவது நீண்ட வாழ்வுக்கு வழி வகுக்காது.
தனுசு லக்னம். இதன் 7ம் அதிபதியான புதனின் நட்சத்திரங்கள் – ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகும். இந்த நட்சத்திரங்கள் ஒன்றை ஜன்ம நட்சத்திரமாகப் பெற்று புதன் நீசமாக ஜாதகத்தில் பெற்று இருந்தால் ஆயிரம் காலத்துப் பயிர் என்பது பொய்யான வாதமாகி விடும்.
மகரம் லக்னமாகி இதன் 7ம் அதிபதி சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் நட்சத்திரங்களில் ஒன்றை ஜென்ம நட்சத்திரமாகப் பெற்று சந்திரன் நீசமாகி இருந்தால் கொஞ்சிடும் இல்லற இன்பம் அஞ்சிடும்படியாக மாறும்.
கும்ப லக்னம் 7ம் அதிபதி சூரியன். சூரிய னின் நட்சத்திரங்கள் கார்த்திகை, உத்திரம், உத்திராடம். இவை ஒன்றை ஜென்ம நட்சத்திர மாகப் பெற்று சூரியன் நீசமாகி இருந்தால் சிறப்பான இல்வாழ்க்கை கசப்பெனமாறும்.
மீன லக்னத்திற்கு தனுசு லக்னத்திற்கும் கூறிய அமைப்பும் பொருந்தும். மீன லக்னத் தின் ஏழாம் அதிபதி புதன், புதன் நட்சத் திரத்தை ஜென்ம நட்சத்திரமாய்ப் பெற்றிருந்து புதன் நீசமாகிடக்கூடாது.
அசுவினி, மகம், மூலம் என்ற கேது நட்சத்திரங்களும், திருவாதிரை, சுவாதி சதயம் என்ற ராகு நட்சத்திரங்களும் விதிவிலக்குப் பெறுகின்றன. எனினும் இவற்றுக்கும் விளக்கங்கள் உண்டு.
இதே போல கடன் படுத்தும் பாடும். இப்படித்தான் அது எப்படின்னு பார். கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினன் இலங்கை வேந்தன் என்பார்கள்.
இந்த கடன் மனிதர்களை பல அவமானங் கள், பல உயிர்கள், பலி, பொருட்கள், நிலம், வீடு, வாகனம், மனைவி, மக்கள், உறவு, நண்பர்கள் அனைத்தையும் இழந்து நிர்கதியாய் தவிக்க வைக்கின்றது. வாழ்க்கை முழுவதும் கடன், கடன் யாருக்கு எளிதில் கிடைக்கும். யாருக்கு கடன் சீக்கிரத்தில் அடைபடும். யார் அபராதம் கட்டுவார்கள் என்பதை விளக்கமாக கூறுகிறேன் கேட்டுக்கோ.
கடன் படுபவர்கள் யார்?
1. லக்னத்தில் 5ம் அதிபதி இருந்து பாபிகள் சேர்க்கை பார்வையிட்டால் ஜாதகன் கடன் படுவர்.
2. லக்னாதிபதி அஸ்தமனம், பகை, நீசம். பாபிகள் தொடர்பு, 6,8,12ல்(அ) 9ம் அதிபதி மாரகாதிபதியுடன் கூடினால் உலகத்தில் உயர் பதவியில் இருந்தாலும் கடன் படுவான் ஜாதகர்.
3. லக்னாதிபதி விரயத்திலும், தனத்தில் பாபிகளும், 10ம் அதிபதி 6ம் அதிபதியுடன் கூடியோ? பார்த்தோ இருந்தால் ஜாதகன் கடன்படுவார்கள்.
4. லக்னத்தில் (அ) தனத்தில் 6ம் அதிபதி இருக்க, 11ம் அதிபதி 6,8,12ல் இருக்க ஜாதகனுக்கு எளிதில் கடன் கிடைக்கும்.
5. லக்னம், லாபம், தனம் ஆகிய அதிபதி களில் ஒருவர் சர ராசியில் இருந்தால் எப் போதும் வாழ்நாள் முழுவதும் கடனாளியாக வாழ்வார்கள்.
6. 2ம் அதிபதி நீச்சம், அஸ்தனம், அடைந்திருந் தால் ஜாதகன் எப்போதும் கடனாளிதான்.
7. 2ம் அதிபதி பாபியுடன் கூடி 6ல் நின்றால் ஜாதகன் கடனால் கஷ்டப்படுவான்.
8. புதனும், சனியும் கூடினால் ஜாதகன் கடன் படுவான்.
9. லாபாதிபதி இருக்கும் நவாம்ச அதிபதி 6,8,12ல் சுபர்களுடன் கூடி இருந்தால் ஜாதகர் கடனால் கஷ்டப்படுவான்.
10. 2ம் அதிபதி நீச்சனுடன் இருந்து, 6ம் அதிபதி 1, 4, 7,10ல் இருந்து எல்லா வசதிகளும் இருந்தும், கடன் அடைத்துவிட்டாலும், திரும்ப புதிய கடன் ஜாதகருக்கு வந்து சேரும்.
11. 6க்குரியவர் பாபிகளின் தொடர்பு பெற்றிருந்தால் சதா கடன் தொல்லை ஏற்படும்.
12. 4க்குரியவர் செவ்வாயுடன் கூடி பலம் பெற்று, 7ல் சந்திரன் ஆட்சி, உச்சம் பெற்று இருந்தால் நிலம், வீடு வசதிகள் ஏற்படும்.
ஆனால் நிலத்தின் பேரில் கடன் ஏற்படும். அது லேசில் அடையாது. யார் அபராதம் கட்டுவார்கள்னு பார்.
1. 12ம் அதிபதி 2ல், 11ம் அதிபதி 12 இருந்தும் 2 அதிபதி நீச்சமுடன் இருந்தாலும்
2. 2ம் அதிபதி சூரியனுடன் கூடி நீச்சம் பெற்று இருந்தாலும்
3. 2ம் இடத்தில் சனி இருந்தாலும், அஷ்ட மாதிகளுடன் இருந்தாலும்
4. லக்னாதிபதி பலமற்று சூரியனுடன் கூடி, 2ம் அதிபதி 12 ல் நீச்சமுடன் இருந்தாலும் ஜாதகன் அபராதம் கட்டுவான்.
5. 11ம் அதிபதி பாபிகளுடன் கூடி 8ல் இருந்தாலும் அபராதம் கட்டுவார்கள்.
கடன் தீரும் வழியையும் சொல்றேன் கேட்டுக்கோ.
1. 4,,5,8,12ல் சுபர்கள் சம்பந்தம் ஏற்பட்டு இருந்தாலும் இவர்களது தசா புத்தி காலங் களில் கடன் அடைபடும்.
2. 6ம் அதிபதிக்கு குருவின் தொடர்பு, பார்வையிருந்தால் கடன் அடைபடும்.
3. 11க்குரியவர் 6ம் அதிபதிக்கு சுப சம்பந்தம் பெற்றிருந்தால் ஜாதகன் கடனை அடைத்து விடுவான்.
கடன் பிரச்சினைகளிலிருந்து தீர்வு பெற்று நலமுடன் வாழ இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்.
இதெல்லாம் என் குருநாதர் எனக்கு உப தேசம் செய்த காலத்தில் கேட்டது. ரொம்ப நாளைக்கு பிறகு நீ கேட்டது எனக்கு மீண்டும் ஒரு முறை ஸிமீநீணீறீறீ பண்ணின மாதிரி ஆச்சு. என் சொந்த அனுபவத்ததான் நான் சொல்ல முடியும். ரொம்ப சந்தோஷம் ராமசாமி என்ற உடன் வந்தவர்கள் அம்பாளுக்கு நமஸ்காரம் செய்து விட்டு கிளம்பினர்.