thethiyurஇருப்பிடம்: கும்பகோணத்தில் இருந்து நாச்சியார் கோயில் வழியாக பூந்தோட்டம் செல்லும் வழியில் கூந்தலூருக்கு இரண்டு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது தேதியூர். தற்போது “எரவாஞ்சேரி” என்று உள்ளது.

18 கிராம வாத்திமா கிராமத்தில் சிறப்புமிக்க கிராமமாக திகழ்வது “தேதியூர்” கிராமம் ஆகும்.
தேதியூர் என்றாலே “தேதியூர் ஸ்ரீப்ரம்ம ஸ்ரீ சுப்ரமண்ய சாஸ்த்திரிகள்” பெயர்தான் ஞாபகத்திற்கு வரும். அவரை பற்றிய சிறு குறிப்பு பின்னால் குறிப்பிடுகிறேன்.

பெயர் காரணம்:

தேதியூருக்குத் தெற்கே திருமலை ராஜன் ஆறும் வடக்கே அரசலாறும் உள்ளன. ராவணன்- ஜடாயுக்கும் நடந்த யுத்தத்தில் ஜடாயு படுகாயம் அடைகிறார். ராவண் தேரை ஜடாயு தகைத்ததால் தேர்தகையூர் என்று பெயர் பெற்று பிறகு தேதியூர் ஆனது. யுத்தத்தில் களைத்த சமயம் ராவணனுக்கு தாகம் எடுக்க அங்குள்ள குளத்தில் நீர் அருந்த சென்ற சமயம் ஜடாயுவால் தாக்கப்பட்ட ராவணனுடைய ரதம் குளத்தில் இறங்கி விட ராவணன் எவ்வளவு முயன்றும் அதை வெளியில் கொண்டு வர முடியாமல் இங்கேயே விட்டு சென்று விட்டதாகவும் ஆகாயமார்க்கமாக இலங்கை சென்றதாகவும் தெரிய வருகிறது. இன்றும் ராவணன் ரதம் குளத்தில் இருப்பதாக ஐதீகம். அதனால் இந்த குளத்திற்கு “ராவண தீர்த்தம்” என்ற பெயர் பெற்றது.

அந்த காலத்தில் ஊரை சுற்றி நான்குபுரமும் வயல்வெளியும், ஆற்றங்கரையும், கோயில்களும், குளங்களும் அழகுர அமைந்த இடம். ஆனால் இன்று வேலை நிமித்தம் காரணமாக இங்கு வசித்து வந்தவர்களில் பலர் வெளியூர்களிலும், வெளிநாட்டிற்கும் சென்று விட்டதால் பலர் கிராமத்தில் இருந்த வீட்டை விற்க நேரிட்டு இன்று பார்ப்பதற்கே மனது வேதனைப்படும் அளவிற்கு உள்ளது. ஆனால் இங்கு உள்ள சிலராலும், வெளியூர்களுக்கு இடம் பெயர்ந்தவர்களாலும் சில நற்பணி மன்றம் மூலமாகவும் அனைத்து கோயில்களும் மிகவும் நன்றாக பராமரித்து வர உதவியாக உள்ளது.

“பதினெட்டு வாத்யம கிராமம்”

‘புரம் பஞ்சகம், ஊர் பஞ்சகம், குடிவித்யம் கொண்டான், படி, காடு, தை, துறை, மூலை என முடியும் பதினெட்டு வாத்யம கிராமம்’ என்ற பாடல் உண்டு.

புரம் என முடியும் ஊர்கள் ஐந்து. ஆனதாண்டவபுரம், திப்பிராஜபுரம், கோனேரிராஜபுரம், விஷ்ணுபுரம், சேங்காலிபுரம், ஊர் என முடியும் ஊர் ஐந்து, தேதியூர், கூந்தலூர், மொழையூர், சித்தன்வாழூர், பாலூர், குடி என முடியும் ஊர் இரண்டு, செம்மங்குடி, தூத்துக்குடி கொண்டான் என்பது முடிகொண்டான், படி என்பது மாப்படி, காடு என்பது அரசவனங்காடு, தை என்பது மாந்தை, துறை என்பது மரத்துறை. மூலை என்பது தட்டாத்திமூலை. இப்படி 18 வாத்யம கிராமங்கள். ஆனால் தற்சமயம் வாத்யம கிராமங்களில் வடமாள், பிரஹசரணம் தவிர அனைத்து இன மக்களும் வசித்து வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த காலத்தில் இந்த 18 கிராமத்திற்குள் தான் பெண் கொடுத்து மாப்பிள்ளை தேர்வு செய்து வந்ததாக தெரிகிறது.

வாத்யமர்கள் பெயர் காரணம்:

2வாத்யமார்களின் சிறப்பான பாரம்பரியத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன் ‘வாத்யமா’ என்ற சொல்லின் சொற்பிறப்பியலைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியம். ‘வாத்யமா’ என்ற சொல் ‘மாத்யமா’ என்ற சொல்லிலிருந்து மருவியதாகும். பிற்காலத்தில் ஆதிசங்கரர் மாத்யமர்களின் ஆய்வுத்திறனால் கவரப்பட்டு அவர்களுடைய நுட்பத்தைத் தன்னுடைய அத்வைத ஸ்தாபனத்தில் தானும் கையாண்டார். இதுவே மாத்யமர்களுக்கும் அவருக்கும் ஒரு பிணைப்பு ஏற்படுவதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். மாத்யமர்கள் காஞ்சிபுரம் இடம் பெயர்ந்தனர். பிறகு அவர்கள் தஞ்சை மாவட்டத்திலுள்ள கூந்தலூரைச் சுற்றியுள்ள இடங்களில் குடியேறியதற்குச் சரித்திரச் சான்றுகள் உள்ளன.

வாத்யமர்கள் 16ஆம் நூற்றாண்டுக்கும் 18ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த காஞ்சிபுரம், வேலூர் ஆகிய பகுதிகளிலிருந்து இந்த 18 கிராமங்களில் குடியேறினார்கள் என்று பரவலாக நம்பப்படுகிறது. வாத்யமார்கள் வருணாசிரம முறைகளை கடைப்பிடித்து வேத விற்பன்னர்களாகவும், ஞானபண்டிதர்களாகவும், நித்யகர்மா அனுஷ்டானங்களை செய்பவர்களாகவும், தர்மிஷ்டர்களாகவும், கடவுள் பக்தி மிக்கவர்களாகவும், சுதந்திர போராட்ட தியாகிகளாகவும், கதா காலக்ஷேபம் செய்பவர்களாகவும், இசை கலைஞர்களாகவும், ஓவியம், எழுத்து, மருத்துவம், விஞ்ஞானம் அரசுத்துறைகள் போன்ற அனைத்திலும் சிறந்து விளங்கி வந்துள்ளார்கள்.

ஆனதாண்டவபுரம் ஸ்ரீபத்மனாப ஐயர் அவர்களால் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டு தற்போது காஞ்சி மடத்தில் உள்ள “ராமாயண புராணத்தில்” வாத்யமர்கள் ராய வேலூரைச் சுற்றியுள்ள இடங்களிலிருந்து “கூந்தலூருக்கு” இடம் பெயர்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது. அரி சொல் ஆறு என்று அழைக்கப்பட்டு பின் மருவிய அரசலாற்றங்கரையில் தென்கரையில் அமைந்த சிறிய கிராமம் கூந்தலூர். ஸ்ரீபரத்வாஜர் ஆஸ்ரமத்திற்கு ராமர், சீதை, லக்ஷ்மணன் சென்று கொண்டிருந்தபோது இந்த இடம் வந்த போது இங்கு உள்ள திருக்குளத்தில் ஸ்நானம் செய்துவிட்டுச் செல்கையில் சீதையின் தலைமுடிகள் சில இங்கு உதிர்ந்ததால் “கூந்தல் உதிர்ந்த ஊர்” என பெயர் பெற்று பின் மருவி “கூந்தலூர்” ஆனது. விசாலாட்சி அம்பாள் சமேத விஸ்வநாதர் கோவில், அக்ரஹாரத்திற்குக் கிழக்கிலும், ருக்மணி சமேத லக்ஷ்மி நாராயண பெருமாள் கோவில் மேற்கிலும் உள்ளது. ஜம்புகாரண்யேஸ்வர ஸ்வாமி கோவில் அக்ரஹாரத்திற்கு இரண்டு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

subramania_sasthrigalஊரும் சுற்றியுள்ள கோயில்களும் சிறப்புகளும்

தேதியூர் மூன்று அக்ரஹாரங்களைக் கொண்டது. மேலஅக்ரஹாரம், நடு அக்ரஹாரம், கீழஅக்ரஹாரம். அந்த காலத்தில் அக்ரஹாரத்தில் எப்பொழுதும் வேதகோஷம் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

சிவன் கோயில்: சுந்தர கனகாம்பிகா சமேத பிரத்யக்ஷ பரமேஸ்வரர் கோயில், மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோயில், திரிலோக சுந்தரி சமேத சுந்தரேஸ்வரர் கோயில் ஆகும்.

பெருமாள் கோயில்: வரதராஜ பெருமாள் கோயில், கருகமாணிக்கம் பெருமாள் கோயில்.

பிள்ளையார் கோயில்: வரசித்தி விநாயகர் கோயில்

அருகில் உள்ள ஊர்: விஷ்ணுபுரம், திருவீழிமிழலை.

கோயிலின் சிறப்பு: ஜடாயுவுக்கும் ராவணனுக்கும் யுத்தம் நடந்த சமயம் பரமேஸ்வரன் பிரத்யக்க்ஷமாக காட்சி கொடுத்த ஸ்தலம் அதனால் “பிரத்யக்க்ஷ பரமேஸ்வரர்” என்று பெயர் காரணமாக அமைந்தது. இங்குள்ள பைரவர் மிகவும் சக்திவாய்ந்ததாகும். பல குடும்பங்களுக்கு இந்த கோயில் குல தெய்வ கோயிலாக அமைந்துள்ளது.

மதுரையில் நடந்த திருக்கல்யாண வைபவத்தை மீண்டும் தரிசிக்க தேதியூரில் வசித்துவந்த பிராமணர்கள் மீனாக்ஷி சுந்தரேஸ்வரரையும் மகாவிஷ்ணுவையும் நினைத்து வேதகோஷம் எழுப்ப பிராமணர்களின் கோரிக்கையை ஏற்று இருவரும் கிளம்பி தேதியூர் கிராமத்துக்கு பிரவேசித்தனர். அது சமயம் அரிசொல் ஆற்றின் கரையில் அமைந்துள்ள “லோகசுந்தரி சமேத சுந்தரேஸ்வரர்” ஆலயத்திலும் (தற்போது ஆற்றின் கரையில் அமைந்துள்ளதால் ஆற்றங்கரை கோயில் என்று பெயர் காரணமாக மாறியது). மகா விஷ்ணு & விஷ்ணுவின் அந்தபுரமாக அமைந்துள்ள “விஷ்ணுபுரத்திலும்” தங்கி உங்களது கோரிக்கையை ஏற்று எங்களது திருக்கல்யாண வைபவத்தை அருகில் உள்ள “திருவீழிமிழலை” என்ற கிராமத்தில் வந்து தரிசிக்கும் படி கட்டளை இட இன்றும் “கல்யாண சுந்தரேஸ்வரராக” அங்கு காட்சி கொடுக்கிறார்கள். திருமணம் ஆக வேண்டி இன்றும் பலர் இங்கு வந்து பிரார்த்தனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. திருக்கல்யாண வைபவம் முடிந்த பிறகு அதே கோலத்துடன் காட்சி கொடுத்த ஸ்தலமே இன்று தேதியூரில் “மீனாக்ஷி சுந்தரேஸ்வரர்” ஆலயம் ஆகும்.
அப்பொழுது மகா விஷ்ணு விஷ்ணுபுரத்தில் ஓய்வு எடுத்து இங்கு வந்து வரதராஜ பெருமாளாகவும் ஸ்ரீதேவி & பூதேவி ஸமேதராக காட்சி கொடுத்து அமைந்த ஸ்தலமே “வரதராஜ பெருமாள்” ஆலயம் மேல அக்ரஹாரத்தில் அமைந்துள்ளது.

தன் தேவியர் கருக மணியில் மாலை அணிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டு கேட்டதற்கு இணங்க “கருகமாணிக்க பெருமாளாக” காட்சி கொடுக்கின்றனர். அங்கிருந்து பார்த்தால் ஜடாயு– –ராவணன் யுத்தம் செய்த இடம் தெரியும்.

எல்லா பிள்ளையார் கோயிலிலும் வாகனம் மூஞ்சோறு இருக்கும். ஆனால் கீழ அக்ரஹாரத்தில் அமைந்துள்ள பிள்ளையார் கோயிலில் நந்தி வாகனமாக உள்ளது. திருக்கல்யாணத்திற்கு வந்த பிள்ளையாரும் நந்தி தேவரும் இங்கு தங்கி அருள்பாலிக்கின்றனர்.

ஆற்றங்கரை கோயிலில் அமைந்துள்ள முருகப் பெருமான் தென்திசை நோக்கி காட்சி தருவது மிகவும் விசேஷமாகும். பூஜை காலங்களில் தீப ஆராதனை நடக்கும் சமயம் மேல அக்ரகாரத்தில் உள்ளவர்கள் தன் வீட்டின் வாசலில் இருந்தே தரிசிக்க முடியும். அதேபேல வரதராஜ பெருமாள் தீப ஆராதனையை நடு அக்ரஹாரம், கீழ அக்ரஹார மக்கள் தன் வீட்டின் வாசலில் இருந்தே தரிசிக்க முடியும்.

2000&ம் மாவது ஆண்டு நடந்த கும்பாபிஷேக காலத்தில் ஆற்றங்கரை கோயிலில் உள்ள முருகப் பெருமான் பின்னமாகி புதுப்பிக்க பட்டு வேறு ஒரு முருகப்பெருமான் சிலை, பிரதிஷ்டை செய்யப்பட்டதாக தெரிகிறது. அந்த ஆண்டு திரு தேதியூர் மஹாதேவன் அவர்களின் அருள்வாக்கின்படி ஆற்றங்கரை கோயில், வரதராஜபெருமாள் கோயில் மற்றும் கருக மாணிக்கம் பெருமாள் கோயில் ஆகிய மூன்று கோயில்களுக்கும் ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது சிறப்பு அம்சம் ஆகும்.

ஊருக்கு பெருமை சேர்க்கும் “சங்கரா நடுநிலைப் பள்ளி” மீனாக்ஷி அம்மன் கோயில் எதிரில் உள்ளது. அங்குதான் இன்றைய இளைய தலைமுறையினர் படித்து பட்டம் பெற்று பலரும் இன்று நல்ல நிலையில் இருக்கிறார்கள்.

ஊருக்கு பெருமை சேர்க்கும் பலரில் இன்றைய இளைய தலைமுறையில் எனக்கு தெரிந்த சிலரை மட்டும் இங்கே குறிப்பிட ஆசைப்படுகிறேன். விடுபட்டவர்கள் குறித்து வருத்தப்பட வேண்டாம்.
திரு. வாஞ்சிநாத ஐயர், “சங்கரா நடுநிலைப் பள்ளியின்” ஸ்தாபகர். காஞ்சி மடத்திற்கு மிகவும் வேண்டியவர். பரமாசாரியாளுக்கு மிகவும் ஆப்த்தமானவர்களில் இவரும் ஒருவர். தனது கடைசி காலத்தில் அதிகமாக மடத்தில் சேவை செய்து வந்தார். அவர் காலத்திற்கு பிறகு லேட் பிச்சுமணி அவர்கள் பள்ளி நிர்வாகத்தை கவனித்து வந்தார். தற்போது அவர்கள் குடும்பத்தினர் கவனித்து வருகின்றனர்.

தேதியூர் மற்றும் அருகில் உள்ள பல கோயில்களுக்கு திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் செய்து வைத்தவர் தேதியூர் எல்ஐசி ராமன் அவர்கள். அவருக்கு உறுதுணையாக லேட் டிஆர்ஸ் என்று அழைக்கப்படும் டிஆர்.சுப்ரமணியம். லேட் பம்மல் ராமச்சந்திர ஐயர் அவர் இருந்தாலே ஊரே அவரது பெருந்தன்மைக்கு மதிப்பு மரியாதை கொடுத்து வந்தனர். மிகவும் நேர்மையாகவும் கண்டிப்பு தன்மை மிக்கவர். தேதியூர் பி.ராமையா சுதந்திர போராட்ட தியாகியாவார்.

தேதியூர் ப்ரம்மஸ்ரீ தேதியூர் சுப்ரமணிய சாஸ்திரிகள் பற்றிய சிறு குறிப்பு:

சாஸ்திரிகள் அத்வைத மத க்ரந்தங்களைப் படித்து அத்வைத சபையானது இவரால் வேரூன்றப்பட்டது. ஸ்ரீ சங்கர பாஷ்யத்தை முறைபடி கற்பித்தார். பல இடங்களில் ராமாயணம், மகாபாரதம் மற்றும் முக்கியமான புராணங்களின் விளக்கங்களை பொது மக்களின் மனதில் நன்கு பதியும் வகையில் எடுத்துரைத்தார். தன் அனுஷ்டானத்தில் “ஸ்ரீவித்யை”யே அவருக்கு மானஸீகமாக உள்ளம் கவர்ந்தது.

தன் யோக திருஷ்டியால் அறிந்து கொண்ட ச்ருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ சச்சிதானந்த சிவாபிநவ ந்ருஸிம்ம பாரதி மஹாஸ்வாமிகள் அவருக்கு ஸ்ரீவித்யா தீக்ஷையை முதற்படியாக அருளி தனக்கு பின்வரும் ஆசார்யர்கள் அதை பூர்த்தி செய்து கொடுப்பார்கள் எனறும் பணித்தார்கள்.

காலப்போக்கில் சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ சந்திர சேகரபாரதி மஹாஸ்வாமிகள் அதை பூர்த்தி செய்து கொடுத்தார்கள். சாஸ்த்ர ரத்னம், வேதமூர்த்தி, சாஸ்த்ர ரத்னாகரம் என்னும் பட்டங்களும் மேலும் பல பட்டங்களை பெற்றவர். 1930க்கு பிறகு தென்னாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல அறிய சொற்பொழிவுகளை நிகழ்த்தி தனக்கு என ஒரு இடத்தை பிடித்தவர்.

தேதியூர் சாஸ்த்ரிகளின் உடன் பிறந்த குணம் என்று குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் தான் ஈட்டியதை நாட்டமின்றி பிறருக்கு ஈவதே ஆகும். அவரை போற்றிய பொதுமக்களும் மாணவர்களும் அவர் செய்து வந்த பணிக்கு காணிக்கைகளையும் பரிசுகளையும் தாராளமாக வழங்கினர். அவர் சாஸ்த்திர பணிக்கும், கல்விப்பணிக்கும் வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்து வந்தவர். பிறருடைய அக்ஞானத்தையும் மனக்குழப்பத்தையும் தெளிவுபடுத்தி கம்பீரமாகவே விளங்கியவர் மிகவும் கோபிஷ்டர் என்றும் அழைக்கப்படுவார்கள்.

வடமொழியிலும் தமிழிலும் ராமாயணம், ஸெந்தர்யலஹரி மற்றும் பல நூல்களுக்கு முதலில் விரிவுரை எழுதிய பெருமை இவரையே சேரும். அண்ணாரின் சொல் வன்மை, எழுத்து வன்மைக்கு நிகர் யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ சாஸ்த்திரிகள் 1954ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் நாள் சென்னை அபிராமபுரத்தில் தன் இல்லத்தில் விதேக கைவல்யத்தை அடைந்தார்கள். அவரது பரம்பரையில் வந்தவர்கள் இன்றும் அபிராமபுரத்தில் தொடர்ந்து வசித்து வருகின்றனர்.

அவரது பரம்பரையில் வந்தவர்கள் ஸ்ரீவித்யா மந்த்ர ரத்னம் ப்ரம்மஸ்ரீ தேதியூர் காசி விஸ்வநாத சாஸ்த்திரிகள் (S.V. சாஸ்த்ரி) குடும்பமும் ஒன்றாகும். அவரது மூத்த மகன் திரு. வி. ஜானகிராமன் (V.J ராமன்) தேதியூர் V.மஹாதேவன், ராஜி நாராயணன், V. ராஜாராமன் என்பதை நினைக்கும் பொழுது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

தேதியூர் ராதா கல்யாண மகோத்ஸவம் ஸ்ரீ வரதராஜ பெருமான் கோயில் மேல அக்ரஹாரத்தில் வரும் 2018 மே மாதம் 5&6, ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. அது சமயம் அனைவரும் கலந்து கொண்டு தங்களால் முடிந்த பொருள் உதவி செய்து தேதியூர் வாசிகள் மற்றும் அனைவரது ஒத்தாசையுடன் சிறப்பிக்க வேண்டுமாய் தாழ்மையுடன் வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.

அன்பர்கள் இங்குள்ள அனைத்து கோயில்களையும் ஒரு முறை வலம் வந்தால் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள ஸகல தோஷங்களும் நீங்கி மேன் மேலும் சிறப்பாக வாழ வழிவகுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Pl send your money through by way of Cheque,DD or money transfer to:The Thiyur Radhakalayana Committee, Corporation Bank, Ambattur Branch. SB Account Number:520101252227276, IFSC Code: CORP0000781,MICR CODE:600017019.(OR)In the name of Radhakalyanakommittee,No.2, Pachayappan St, Venkateswara Nagar Extn,Ambattur,Chennai 600053.Ph:8754065460,7904337607.

(after receiving the money on 6th of May 2018 is utilized in the next year Radhakalayanam).

astrologer_thetiyur_mahadevDivine Astrologer
தேதியூர் V.மஹாதேவன்
Swayamvaralaya,
vedicpoojahomam.com
98417 89483, 8825609304