கருணை உள்ளம் மிக்க பஞ்சவர்ணேஸ்வரர் சமேத காந்திமதி அம்மை திருகோவில் – திருமூக்கிச்சரம் (உறையூர்)uraiyur2

 இறைவன்பெயர்: பஞ்சவர்ணேஸ்வரர், தான்தோன்றீஸ்வரர்

இறைவிபெயர்: காந்திமதிஅம்மை, குங்குமவல்லி

பதிகம்: திருஞானசம்பந்தர் – 1

தலச்சிறப்பு:  திருச்சிராப்பள்ளிநகரின் ஒரு பகுதியான உறையூர் என்னும் சிவஸ்தலம் ஒரு மிகப்பழமையான 8ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் இரண்டாம் வரகுணபாண்டியனால் கட்டப்பட்ட சிவாலயத்தை தன்னகத்தே கொண்டுள்ளது.

கி.பி. 885 ம் ஆண்டு கல்வெட்டிலிருந்து இக்கோவிலில் பூஜைகள் சிறப்பாக நடைபெற தங்கநாணயங்கள் தானமாக உறையூர் கிராம சபைக்கு கொடுக்கபட்டதை அறிய முடிகிறது. திருச்சி மலைக்கோட்டையில் உள்ள தாயுமானவர் ஆலயத்திலுள்ள கல்வெட்டுகளும் இரண்டாம் வரகுணபாண்டிய மன்னன் உறையூர் கோவிலுக்கு செய்த தான தருமங்கள் பற்றிய விபரங்களைக் குறிக்கின்றன.

uraiyur7தலவரலாறு: உறையூரை தலைநகராகக்கொண்டு அரசாண்டு வந்த சோழமன்னனின் மனைவி காந்திமதி ஒரு சிறந்த சிவபக்தை. தினந்தோறும் திருச்சிராப்பள்ளி மலைக்குச்சென்று தாயுமானவரை வழிபட்டு வந்தாள். அவள் பிள்ளைப்பேறு அடைந்த போதும் தவறாமல் வழிபாடு செய்துவந்தாள். ஒருநாள் உறையூரில் இருந்து திருச்சிராப்பள்ளி சென்று கொண்டிருந்த போது வெய்யில் கொடுமை தாளாமல் வழியில் மயங்கி விழுந்தாள்.  தனது இறைவழிபாடு தடைபட்டுவிட்டதே என்று மிகவும் மனம் வருந்தினாள். காந்திமதியின் மனவருத்தத்தை போக்க விரும்பிய இறைவன் அந்த இடத்திலேயே காந்திமதிக்குக் காட்சிதந்தார். இறைவன் சுயம்புவாகத் தோன்றியதால் தான்தோன்றீஸ்வரர் என்ற பெயர் பெற்றார்.

uriyur1யானையின்மதத்தைகோழிஅடக்கும்சிற்பம் மற்றுமொரு தலவரலாறும் இத்தலத்திற்கு உண்டு. சோழமன்னன் கரிகால் பெருவளத்தான் தன் பட்டத்து யானை மேல் ஏறி உறையூரை வலம் வந்து கொண்டிருந்த போது  யானைக்கு மதம்பிடித்து எல்லோரையும் துன்புறுத்த ஆரம்பித்ததது. யானையை அடக்க முடியாமல் மன்னனின் படைவீரர்கள் கலங்கினர். சிவபெருமான் மீது தீராத பக்தியுள்ள மன்னன் இறைவனை நினைத்து பிரார்த்தனை செய்தான். சிவபெருமானும் கருனைகூர்ந்து உறையூர் தெருவிலுள்ள ஒரு கோழியை தன் கடைக்கண்ணால் நோக்க, அக்கோழியும்  அசுரபலம் பெற்று பறந்துசென்று யானையின் மத்தகத்தின் மீதமர்ந்து அதை குத்தி தாக்கியது. கோழியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் யானை மிரண்டு ஓடி ஒரு வில்வமரத்தடியின் கீழ் நின்றது. கோழியும் அங்கே வந்தமர்ந்தது. கோழியின் வீரச்செயலை கண்ட மன்னன் உறையூர் தலத்தின் மகிமையை உணர்ந்து தான் வணங்கும் சிவபெருமானுக்கு இத்தலத்தில் ஆலயம் ஒன்று எழுப்பினான். இத்தலமும் கோழியூர் என்ற பெயரில் சிறப்புடன் விளங்கியது. இத் தலவரலாற்றை நினைவு படுத்தும் வகையில் மூலவர் கருவறை வெளிச்சுவற்றில் வலதுபுறம் யானையின்மதத்தை கோழி அடக்கும் சிற்பம் ஒன்றை காண்லாம்.

uraiyur5கோவில்அமைப்பு: கிழக்கு நோக்கிய முகப்பு வாயிலுடன் ஆலயம் அமைந்துள்ளது. உள் கல் மண்டபத்தைத் தாண்டி ஆலயத்தில் நுழைந்தவுடன் அழகிய சிற்பவேலைப்பாடுகளுடன் கூடிய நந்தியைக்காணலாம். கோவிலில் மகாமண்டபம், அர்த்தமண்டபம் கடந்து சென்றால் மூலவர் கருவறை இருக்கிறது. இங்கு சிவபெருமான் உத்தங்க முனிவருக்கு ஐந்து வர்ணமுடைய திருக் கோலத்தை  ஐந்து சாமங்களில் காட்டியருளினார். காலையில் ரத்ன லிங்க மாகவும், உச்சிக்காலத்தில் ஸ்படிகலிங்கமாகவும், மாலையில் ஸ்வர்ணலிங்கமாகவும்,  இரவில் வைரலிங்கமாகவும், அர்த்தசாமத்தில் சித்திர லிங்கமாகவும் காட்சி அளித்ததால் இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர் எனப்படுகிறார். உத்தங்க முனிவரின் சந்நிதி இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர் சந்நிதிக்கு நேர் எதிரே உள்ளது. கருவறையில் மூலவர் லிங்க உருவில் அகன்ற ஆவுடையார் மீது தான்தோன்றீஸ்வரர் என்ற பெயருடன் காட்சி அளிக்கிறார். மூல மூர்த்தி மிகவும்  சிறிய சிவலிங்கத்திருமேனி.  சுயம்பு மூர்த்தி. உள் மண்டபத்தில் இடப்பக்க முதல் தூணில் உட்புறம் யானைமீது அம்பாரியில் சோழமன்னன் வரும் போது, அவ்யானையைக் கோழி குத்தித்தாக்கும் சிற்பம் உள்ளது. இறைவி காந்திமதி அம்மை தெற்கு நோக்கி தனிசந்நிதியில் கைகளில் அங்குசமும், தாமரை மலரும் வைத்துக்கொண்டு அருள்புரிகிறாள். இத் திருத்தலத்தில் அமைந்துள்ள காந்திமதியம்மை நாகலோகத்தில் நாக கன்னியர்களால் பூசிக்கப்பட்டு சோழமன்னனால் கொண்டு வரப்பட்டு இத்தலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்பது ஐதீகம்.  இத்தலம் ராகு கேது  தோஷம்  போக்கும்  திருத்தலமாகவும், பிரம்மஹத்தி தோஷத்தை போக்கும் என்பதும் ஐதீகம்.

uraiyur6இச்சந்நிதிக்கு அருகில் மஹாவிஷ்னு, சூரியன், காலபைரவர் மற்றும் சனீஸ்வரன் அகியோரின்உருவச்சிலைகள்உள்ளன.

கோவில்நுழைவாயில் அர்த்தமண்டபத்தில் கருவறையின் நுழைவாயிலின் இருபுறமும் சுமார் 6 அடி உயர முள்ள துவாரபாலகர்களின் சிலைகள் உள்ளன. 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும். இந்த இரு சிலைகளும் சிறந்த வேலைப்பாடுகளுடன் சிற்பக்கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கின்றன. கருவறையின் தென்புற வெளிச்சுவற்றில் தட்சினாமூர்த்தியும், வடபுற வெளிச்சுவற்றில் பிரம்மாவும் காட்சிஅளிக்கின்றனர். பெரியதும் சிறியதுமாக இரு தட்சிணாமூர்த்தி உருவங்கள் உள்ளன. பெரிய உருவம் சிறந்த சிற்பக்கலையழகுடன் திகழ்கின்றது. சிறியது சோழர்காலத்தியது. பெரியதாக வைக்க எண்ணி நாட்டுக்கோட்டை நகரத்தார் தம் திருப்பணியில் செய்துவைத்தார்கள். 4 அடி உயர முள்ள சண்டிகேஸ்வரரின் உருவச்சிலையும் காணவேண்டிய ஒன்றாகும்.

uraiyur4திருமாலுக்கு எதிரில் உள்ள தூணில் பிட்சாடனர் உருவம்உள்ளது. இதற்கு எதிர்க்கம்பத்தில் தாருகாவனத்து ரிஷிபத்தினிகளின் உருவங்கள் உள்ளன. உறையூர்க்கோயிலில் சிற்பங்களுக்குக் குறைவில்லை என்பது போல, கருவறையின் வெளிபக்க சுவரில் ஏராளமான சிற்பங்கள் உள்ளன. கருவறை வெளிச்சுவரில் மேற்புறத்தில் நான்கு பக்கங்களிலும், வரிசையாக இறைவனின் பல்வகையான தாண்டவங்களின் சிற்பங்கள் மிக கலையழகுடன் காணப்படுகின்றன.  சுற்றியுள்ள தூண்களில் பலவகையான சிற்பங்கள் உள்ளன. ஒரு தூணில் ஐந்துபெண்கள் உருவத்தையே ஒருகுதிரையாக அமைத்துள்ள சிற்பமும், நான்குபெண்கள் உருவத்தையே ஒருகுதிரையாக அமைத்துள்ள சிற்பமும் பார்த்து ரசிக்கத்தக்கவை. யானைமுகம், மனிதஉடல், பறவைகால் கொண்ட விசித்திரமான சிற்பம் ஒன்றும் உள்ளது. உட்பிரகாரத்தின் தென்புறம் மிகப்பெரிய காளி உருவம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஜெயகாளி என்று அழைக்கப்படும் இந்தக்காளி மிகவும் சக்திவாய்ந்தவள். இத்தலத்தில்உள்ள முருகன் சந்நிதியில் முருகப்பெருமான் ஒரு திருமுகமும் இரண்டு திருக்கரங்களும் விளங்க தனது இருதேவியருடன் எழுந்தருளியுள்ளார். இத்தலம் திருப்புகழ் வைப்புத்தலங்களில் ஒன்று.

uraiyur3பஞ்சபூததலங்களாகிய சிதம்பரம், திருவானைக்காவல், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், காளஹஸ்தி ஆகியதலங்களில் காட்சியளித்து அருள்புரியும் சிவபெருமான் ஐந்து பூதங்களையும் ஒன்றாக்கி உறையும் தலமே திருமூக்கீச்சரம் என்ற உறையூர் திருத்தலம்.  எனவே பஞ்சபூததலங்களை தரிசிக்கும் புண்ணியம் இத்தல இறைவனை வழிபட்டாலே கிடைக்கும் என்பது நிதர்சனமான உண்மை. மேலும் படைத்தலின் தெய்வமாகிய பிரம்மாவே இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளதால் எவ்வகை தொழிலிலும் வெற்றியடைய இத்தல மூலவராகிய பஞ்சவர்ணேஸ்வரரை வழிபட்டால் நலம்பெறலாம்.

கார்க்கோடகன் ஆகிய பாம்பும் கருடனும் இத்தலத்தில் வழிபட்டுள்ளதால் எவ்விதத்தில் பெற்றிருக்கும் சாபம், பாவம், தோஷம் ஆகியவற்றிலிருந்து விமோசனம் கிடைக்கும் தலம் இதுவாகும்.  மற்றும் காசியப முனிவர், அவர்மனைவி கத்துரு இங்கு இறைவனை வழிபட்டுள்ளார். யானை ஏறமுடியாதபடி 70 மாடக்கோவில்களைக்கட்டிய கோச்செங்கட்சோழன், 63 நாயன்மார்களில் ஒருவரான புகழ்ச்சோழன் ஆகியோர் பிறந்த தலம் இதுவே.

புகழ்ச்சோழன் என்ற சோழமன்னன் உறையூரில் ஆட்சிபுரிந்து வந்தான். சிற்றரசன் ஒருவனுடன் போரிட்டு வெற்றி கண்ட புகழ்ச்சோழன் மடிந்து கிடந்த படைவீரர்களுள் ஜடாமுடியுடன் திருநீறு பூசிய தலையையும் கண்டு மிகவும் மனம்நொந்தான்.  சிவனடியார்க்கு அநீதி இழைத்தோமே என்று கலங்கினான். தன்னுடைய மகனுக்கு பட்டம் சூட்டிவிட்டு தீ மூட்டி அதனுள் அந்த சிவனடியார் தலையுடன் தானும் வீழ்ந்து முக்தி பெற்றான். 63 நாயன்மார்களில் ஒருவராகவும் ஆனான்.

பிரார்த்தனை: வேண்டும் வரத்தை வேண்டியபடி அருளும் கருணை உள்ளம் மிக்க பஞ்சவர்ணேஸ்வரர் சமேத காந்திமதி அம்மை திருமணபாக்கியம் கிடைக்க, தீர்க்கசுமங்கலிபாக்கியம், புத்திரபாக்கியம், சுகப்பிரசவம், கல்வி மேம்படவும், மனக்குறையைத் தீர்க்க சாபவிமோசனம் அடைய, அரசு மற்றும் அரசியல் ரீதியான பதவி உயர்வுகள் உள்பட 16 விதமான பாக்கியங்களையும் வேண்டி வழிபட்டு பயன் அடைந்தவர்கள் ஏராளம்.

ராகு– கேது தோஷம் போக்கும் திருத்தலம், நாக தோஷத்தைப் போக்கும் திருத்தலம் பிரம்மஹத்தி தோஷத்தை போக்கு மென்றும் தொடர்ந்து 9 செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் எலுமிச்சை பழத்தில்  நெய்தீபம் ஏற்றி, 9 உதிரி எலுமிச்சைப் பழங்களை வைத்து வழிபட்டால் காரியத் தடைகள்,  உடற்பிணிகள், வறுமை நிலை யாவும் அகலும் என்பது நம்பிக்கையாக உள்ளது. தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி தொடர்ந்து 5 வாரம்  வழிபட்டு வந்தால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம் என்று கூறப்படுகிறது.

எப்படிப்போவது: திருச்சிநகரின் ஒருபகுதி உறையூர்.

உறையூரில் கடைவீதி தெருவில் இத்தலம் அமைந்திருக்கிறது

ஆலயமுகவரி: அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வர் திருக்கோயில்
உறையூர்,உறையூர்அஞ்சல்,திருச்சி, திருச்சிமாவட்டம் PIN – 620003
நடைதிறப்பு: இவ்வாலயம்தினந்தோறும்காலை 6 மணிமுதல் 12 மணிவரையிலும், மாலை 4 மணிமுதல்இரவு 9 மணிவரையிலும்திறந்திருக்கும்

அன்பர்கள் இவ்வாலயத்திற்கு ஒருமுறை சென்று சிவனருள் பெற்று சிறப்பாக வாழப் பிரார்த்தித்து நிறைவு செய்கின்றேன்.

astrologer_thetiyur_mahadevDivine Astrologer
தேதியூர் V.மஹாதேவன்
Swayamvaralaya,
vedicpoojahomam.com
98417 89483, 8825609304