வனஜா மஹாதேவன்

ர்னாட மாநிலம் தலை காவேரியில் குளிப்பதைவிட, ‘ஸ்ரீரங்கம் அகண்ட காவேரியில் குளிப்பதைவிட, மாயூரத்தில் (மயி லாடுதுறை) காவேரியில் ஐப்பசி மாதம் (துலா ஸ்நானம்) நீராடுவது மிகமிக புண்ணியம் ஆகும்.
“கங்கையிற் புனிதமாய காவேரி” என்றார் கம்பர்.
இப்படி புகழப்படும் காவேரி யில் ஐப்பசி மாத முப்பது நாட் களும் நீராட நீண்ட ஆயுள் ¢கிடைக்கும். 29 நாட்கள் நீராடும் வாய்ப்பை பெறாதவர்கள் ஐப்பசி மாத கடைசி நாளில் மாயூரம் துலா ஸ்நான கட்டத்தில் நீராட பல நன்மைகள் உண்டு.
ஒரு நாள் கங்கையிலே நீராட விருப்பம் கொண்ட கண்வமகரிஷி வடதிசை நோக்கி பயணம் மேற்கொண்டார். வழியிலே மூன்று கன்னியர்கள் கண்ணில் தென்பட அவர்களைப் பார்த்து பரிதாபப்பட்ட மகரிஷி அவர்களிடம் அன்புடன் நீங்கள் யார்? என்று விசாரித்தார்.
மகரிஷியே! நாங்கள் தான் கங்கை, யமுனை, சரஸ்வதி என்ற தெய்வ நதிகள்.
பாவம் சேர்த்தவர்கள் எங்களை சரண டைந்து நீராடினர். அவர்களது பாவங்கள் யாவும் எங்களை சேர்ந்து விட்டன. எனவே, இந்த சண்டாள கோலத்துடன் அலைகிறோம், என கண்ணீருடன் கூறினார்கள்.
பாவங்களை அகற்றும் புண்ணிய நதிகளே பாவம் நிறைந்ததாக மாறிவிட்டால்? என கவலைப்பட்ட மகரிஷி நீங்கள் கவலைப் படாதீர்கள். எந்த பாவமாக இருந்தாலும் பாவத்தை போக்கி என்றும் மாறாத பொலிவுடன் தென் திசையிலே பொன்னி ஓடிக் கொண்டிருக்கிறாள். அந்த பொன்னி நதி கரையில் கடைசியாக தவழும் இடம் மாயூரம். இங்கு சென்று நீராடினால் பாவங்கள் தொலை யும் என வழிகாட்டினார். எத்தனை பாவாத்மாக்கள் நீராடினாலும் பொன்னி என்ற காவேரி என்றுமே புனிதமாக இருப்பாள். அதனால் தான் தெய்வப்பொன்னி என கம்பர் சிறப்பிக்கிறார்.
ஐப்பசி மாதத்தில் மாயூரம் காவேரி ஸ்நான கட்டத்தில் தேவர்கள், முனிவர்கள், சரஸ்வதி, லட்சுமி, கௌரி இன்னும் சப்த மாதர்கள் அனைவரும் வந்து நீராடுவது ஐதீகம். இங்கு முப்பது நாட்கள் நீராட முடியாதவர்கள் மூன்று நாட்களாவது நீராடவேண்டும்.
மாயூரம் காவேரி ஸ்நான கட்டத்தில் நீராடுபவர்களின் பாவம் எல்லாம் அன்றே அப்போதே நீங்கி விடும். மாயூரத்தில் துலாஸ்நானம் “முடவன் முழுக்கு” என்றும் அழைக்கப்படுகிறது.
பலகோடி வருடங்களாக துலாஸ்நானம் பிரசித்தி பெற்றது. இதனை அறிந்து நெடுந் தொலைவில் வசிக்கும் ஒரு முடவன் தானும் துலா ஸ்நானம் செய்ய வேண்டும் என ஆசைப் பட்டான். துலா மாதம் தொடங்கிய துமே தவழ்ந்து தவழ்ந்து மாயூரம் நோக்கி புறப்பட்டான். அவன் மாயூரம் வந்து சேரும் நாளில் ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை மாதம் பிறந்து விடு¢கிறது. முப்பது நாட்கள் தவழ்ந்து வந்தும் ஒரு நாள் தாமதமாகி விட்டதே?
இனி என்ன செய்வேன்? எனக்கு புண்ணியம் கிடைக்காதா? எனது பாவம் தொலைய வாய்ப்பில்லையா? எனக் காவேரிக் கரையில் தவழ்ந்த நிலையிலேயே புலம்பிக் கொண்டி ருந்தான்.
இறைவன் செவியில் அவனது அழுகுரல் கேட்கிறது. முப்பது நாட்கள் தவழ்ந்து வந்தவன் ஆயிற்றே! அவனுக்கு விமோசனம் தரவேண்டும் அல்லவா?முடவன் காதுகளில் ஒரு அசரீரி ஒலிக்கிறது.
பக்தனே! கார்த்திகை முதல் நாள் பிறந்து விட்டதே என வருத்தப்படாதே! கார்த்திகை முதல் நாள் மாயூரம் காவேரி கரையில் நீராடி னாலும் துலா ஸ்நான பலன் உனக்கு கிடைக் கும் கவலைப்படாதே! இப்போதே நீராடு.
இறைவனின் குரல் கேட்ட முடவன் உடனே நீராடி பாவங்களைப் போக்கி கொண்டான். எனவே ஐப்பசி மாத முப்பது நாட்களில் அல்லது முடவன் முழுக்காகிய கார்த்திகை முதல் நாள் மாயூரம் காவேரி ஸ்நான கட்டத்தில் நீராடி உங்கள் பாவங்களை போக்¢கி கொள்ள உடனே செல்லுங்கள்.
துலா மாதத்தில் மாயூரம் ஸ்நானகட்டத்தில் நீராடுங்கள். கரையேறி தூய்மையான ஆடை அணிந்து கிழக்கு நோக்கி நின்று சூரிய பகவானை தொழுது பிரார்த்தனை செய்திடுங்கள்.
பிறகு ஸ்நான கட்டத்தின் வடபுறம் உள்ள “வள்ளலார் கோவிலுக்கு” செல்லுங்கள்.
பிரசித்தி பெற்ற தீர்த்தகுண்டம் இந்த ஆலயத்தில் இருக்கிறது. இங்குள்ள இறைவன் வழிகாட்டும் வள்ளல் என அழைக்கப்படு கிறார். அம்மன் “ஞானாம்பிகை” இந்த ஆலயத் தின் சிறப்பு அம்சம் இங்கு எழுந்தருளியுள்ள மேதாதட்சிணாமூர்த்தியாகும்.
யோகசனத்தில் ஞானமுத்திரை கரத்தின ராக அருளாசி தரும் இவர் மற்ற ஸ்தலங்கள் போலின்றி இங்கு நந்தி பெருமான் மேலேயே ஏறி உட்கார்ந்து காட்சி தருகிறார்.
இறைவனையே தாங்கும் பெருமை எனக்குதான் இருக்கிறது என்று ஒரு முறை நந்திதேவருக்கு செருக்கு ஏற்பட்டது. அவரது செருக்கை அடக்க ஞானோபதேசம் செய்தவர் இந்த ஆலய தட்சிணாமூர்த்தி பகவான். அதனால் தான் இங்கு மட்டும் தட்சிணாமூர்த்திக்கு நந்தி பகவான் வானமாக இருந்து வருகிறார்.
பிறகு நாம் செல்ல வேண்டியது மயூரநாதர் ஆலயம். இங்குள்ள இறைவனை மயிலாடு துறையார் என இங்கு உள்ள கல்வெட்டுகள் கூறுகின்றன.
சுவாமி – மயூரநாதர், அம்மன் மயிலம்மை, அபயாம்பிகை, அஞ்சல் நாயகி என்றும் அழைக்கப்படுகிறாள். அஞ்சி வந்த மயிலுக்கு அபயம் தந்தவளே அபயாம்பிகை. அஞ்சல் நாயகி.
அம்மை மயிலாக ஆடிய துறை தான் மயிலாடுதுறை. அம்மை பூஜித்த இறைவனே மயூரநாதர். அம்மையும் மயூரநாதரும் குடிகொண்டுள்ள ஸ்தலமே மாயூரம்.
இதையடுத்து தரிசிக்க வேண்டிய ஆலயம் விஸ்வநாதர் ஆலயம். துலா ஸ்நானகட்ட மண் டபத்துக்கு தெற்கு பகுதியில் அமைந்துள்ளது.
காசிக்குச் செல்ல முடியாதவர்கள் துலா ஸ்நானம் செய்து இங்குள்ள விசுவநாதர் விசாலாட்சியை தரிசித்தால் காசியாத்திரை புண்ணியம் இங்கு கிடைக்கும்.
மாயூரம் பாடல் பெற்ற ஸ்தலம் சுந்தரர், அப்பர் வந்து வழிபட்டு உள்ளனர்.
அருணகிரிநாதர் இந்த ஸ்தலத்தை ரத்தின சிகண்டியூர் என போற்றுகிறார்.
வாழ்வில் எல்லோரும் நீராடவேண்டிய ஸ்நானம்! “துலா ஸ்நானம்” ஐப்பசி பிறந்து விட்டது. மாயூரம் செல்ல தயாராவோம். துலா ஸ்நானம் செய்வோம்!
பாவங்களை போக்குவோம்! பரம்பொருள் அருளை நாமும் நாடுவோம்.