ஜோதிடர் தேதியூர் க்ஷி.மகாதேவன்
9841789483

உடலாலும் புத்தியாலும் விழிப் புடனும், மலர்ச்சியுடனும் செய்கிற காரியங்கள் யாவும் ஆக்கபூர்வமாக அமைந்துவிடும் என்பது திண்ணம். இப்படித்தான் அவர் தனது ஞானத்தையும், பக்தியையும் ஒன்று திரட்டி, சிவனடியார்களில் சான் றோர்கள் யார் யார் என்று தேடினார். அவர்களைப் பற்றிய தகவல்களைச் சேகரித்தார். அப்படிச் சேகரித்த விவரங்களை ஓலை நறுக்குகளில் மளமளவென எழுதிப்பதிவு செய்தார்.

அதன்மூலம் அடியார்களுக்கு அடியார்களாக விளங்கிய உத்தமபுருஷர் களை குணசீலர்களை, நாயன்மார்களைப் பற்றியெல்லாம் மக்கள் அறிந்து கொண்டு வியந்து போற்றினர்.

கயிலைநாதனை ஊர் ஊராகச் சென்று வேண்டி, “பற்றற்ற நிலையில் என்னை வைப்பாய் எனவும் என் பற்றழித்து என்னை ஆட்கொள்வாய், பரமேஸ்வரா” என மனமுருகி வேண்டினார்.

வரும் வழியில் அற்புதமான சிவாலயத்தைக் கண்டார். அங்கேயே சில காலம் தங்கித் தவம் செய்வது என்று முடிவு செய்தார் அந்தச் சிவனடியார். பிரம்மாண்டமான சிவலிங்க மூர்த்தத்தின் சாந்நித்தி யத்தில் தன்னை இழந்தார். தன்னையே சிவனாரிடம் ஒப்படைத்தார். இதைத் தான் சரணாகதி என்கின்றனர் ஆன்றோர்.

கோயிலுக்கு அருகிலேயே ஒரு வீட்டில் குடியிருந்தார் அந்த அடியவர். வீட்டுக்கும், கோயிலுக்கும் நடுவிலேயே சிறிதாக மடம் ஒன்றை நிறுவினார். தினமும் சிவனாரை வழி படுவதும், மடத்தில் அமர்ந்து தனது எண்ணங் களை எழுதுவதுமாக நாட்கள் ஓடின!

ஒரு நாள் அந்த அடியாருக்கு அற்புத தரிசனம் அளித்தார் சிவபெருமான். என் கர்வத்தையும் செருக்கையும் அழித்த “கந்தழீஸ்வரா” என்று நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினார். பரவசத்தில் திளைத்தார்.

அவர் வேறு யாருமில்லை. ‘பெரிய புராணம்’ எனும் மகத்தான நூலை அருளிய சேக்கிழார் பெருமான் தான்.

கி.பி.1241ம் வருடம், திரிபுவனச் சக்கரவர்த்தி ஸ்ரீ ராசராசனின் ஆட்சியில், இந்த ஆலயத்துக்குச் செய்த திருப்பணி விவரங்கள் இன்றும் கல்வெட்டில் உள்ளன. அப்படி யெனில் அவரது ஆட்சிக்கும் முன்பிருந்தே இக் கோயில் உள்ளது என்பது உறுதியாகிறது. பல்லவ மன்னனும் ஸ்ரீ கிருஷ்ணதேவராயரும் கூட இந்தக் கோயிலுக்குத் திருப்பணிகள் செய்துள்ளனர் என்பது தெரிய வருகிறது.

சேக்கிழார் பெருமான் வாழ்ந்து, வழிபட்ட அந்தச் சிவாலயத்தை, ஸ்ரீகந்தழீஸ்வரரைத் தரிசிக்கும் ஆவல் உங்களுக்கும் எழுகிறது தானே! சேக்கிழார் வசித்த வீட்டுக்கு அருகில், அவருக்கும் தனிக்கோயில் எழுப்பி வழிபட்டு வருகின்றனர் ஊர் மக்கள். அந்தத் தலத்தை தரிசிக்கும் எண்ணம் இப்போது இன்னும் அதிகரித்திருக்குமே!

அற்புதமான ஆலயம். உள்ளே நுழைந்து சந்நிதி சந்நிதியாகச் சென்று, பிராகாரத்தை வலம் வந்தபோது, இதுதான்.. . . .இதுதான். . பெரியபுராணம் தந்த பெருமகனார் நின்ற இடமா? இங்குதான் சிவனாரைத் தொழு தாரா சேக்கிழார்!! சிவனடியார்களின் சரிதத்தைத் தொகுத்த சிவனடியாருக்கு, ரிஷபாரூடராக ஈசன் காட்சி தந்தது, இந்தத் தலத்தில்தானா? அப்பேர்ப்பட்ட ஆலயத் துக்கா நாம் வந்துள்ளோம் என்று ஒரு நிமிடம் சிந்திக்க வைக்கிறது.

இரண்டு வருடங்களுக்கு முன்பு குன்றத்தூர் முருகன் கோயிலுக்கு வந்தேன். அப்போது இந்த சிவாலயத்தைக் கண்டதும் அழுதே விட்டேன். ஆலய திருப்பணிகள் முடிந்து இன்று புதுப் பொலிவுடன் காட்சி தருவது கண்டு மன நிறைவாக உள்ளது.

அடடா.. . . . . . சதுர வடிவ ஆவுடையார்; பிரமாண்டத் திருமேனி. ஸ்ரீநர்த்தன விநாயகர், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ஆகிய மூர்த்தங்கள் என்ன அழகு! எத்தனை திருத்த மான வேலைப்பாடு கள்?! அதுமட்டுமா? ஸ்ரீ துர்க்கைக்கு அருகில் உள்ள சுவரில், தனது காலை லிங்கத்தின் மீது தூக்கி வைத்தபடி தனது கண்ணைப் பிடுங்குகிற காட்சி ஆம்…கண்ணப்ப நாயனாரே தான்! அருகில் அவருக்கு ரிஷபாரூடராகக் காட்சி தருகிறார் தென் னாடுடைய சிவபெருமான்.

63 நாயன்மார்களுக்கு தனி சன்னதி சிறப்பாக உள்ளது. சூரியன் வடக்கு
பிரகாரத்தில் மேற்கு பார்த்த நிலையில் காட்சி தருகிறார். ஸ்தல விருட்சம் – அரசு, அருகில் நவக்ரஹ சன்னதி, காலபைரவருக்கு தனி சன்னதி விசேஷமாக உள்ளது.

ஸ்வாமியின் திருநாமம் ஸ்ரீகந்தழீஸ்வரர். அம்பாளின் திருநாமம் ஸ்ரீநகைமுகைவல்லி. மெல்லிய புன்சிரிப்புடன் நின்ற கோலத்தில் காட்சி தரும் நாயகி, தன்னை நாடி வரும் பக்தர்களின் அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றித் தருகிறாள். இவர்களுடன் ஸ்ரீவாலீஸ்வரர் எனும் திருநாமத்துடன் பிர மாண்டமான லிங்கமூர்த்தமாக எழுந்தருளி யுள்ளார் சிவபெருமான்.

மிகவும் சக்தி வாய்ந்த ஆலயம் இது. திருமண தடை, புத்திரப்பேறு வேண்டி இங்கு வந்து பிரார்த்தித்து பயனடைந்தவர்கள் எண்ணிக்கை கணக்கில் அடங்காது என்கிறார் திரு.சாந்தகுமார் அவர்கள்.
சென்னை பல்லாவரத்தில் இருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ளது குன்றத்தூர். பாரிமுனை, தாம்பரம், கோயம்பேடு ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து அடிக்கடி பஸ் வசதி உண்டு.
குன்றத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 1 கி.மீ.தொலைவில் உள்ளது ஸ்ரீகந்தழீஸ் வரர் ஆலயம்.

முக்கியமாக ஸ்ரீகந்தழீஸ்வரர் கோயிலுக்கு அருகில், பரிதாப நிலையில் உள்ள மடத்தையும், அதன் அருகில் தனிக்கோயிலில் குடி கொண்டிருக்கும் தெய்வப்புலவர் சேக்கிழார் பெருமானும் புதுப்பொலிவுடன் விரைவில் திகழ பிரார்த்தித்து செல்கிறோம்.